| ADDED : ஜூலை 27, 2024 06:40 AM
கொடைக்கானல், : கொடைக்கானலில் அரசு போக்குவரத்து கழக இடத்தில் மல்டி லெவல் கார் பார்க்கிங் அமைப்பது தொடர்பாக போக்குவரத்து துறை முதன்மை செயலாளர் பனிந்திர ரெட்டி ஆய்வு செய்தார். கொடைக்கானலில் தொடரும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு ஏற்படுத்த மல்டி லெவல் கார் பார்க்கிங் அமைக்க நீண்ட காலமாக கோரிக்கை எழுந்து வருகிறது. சட்டசபை கூட்டத்தில் கொடைக்கானல் அரசு போக்குவரத்து கழக இடத்தில் மூன்றை ஏக்கரில் மல்டி லெவல் கார் பார்க்கிங் அமைப்பது தொடர்பாக பேசப்பட்டது. இதை தொடர்ந்து அரசு போக்குவரத்து துறை முதன்மை செயலர் பனிந்திர ரெட்டி கொடைக்கானலில் கள ஆய்வு செய்தார். மதுரை மண்டல மேலாண் இயக்குனர் ஆறுமுகம், பொதுமேலாளர் துரைச்சாமி, கோட்ட மேலாளர் ரமேஷ், நகராட்சி கமிஷனர் சத்தியநாதன், ஆர்.டி.ஒ., சிவராம், தாசில்தார் கார்த்திகேயன், கிளை மேலாளர் ராதாகிருஷ்ணன், நகராட்சி தலைவர் செல்லத்துரை, துணைத்தலைவர் மாயக்கண்ணன் உடனிருந்தனர்.