உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / 18 ஆண்டுகளாக நீர் வரத்தின்றி வறட்சியான முருகன்பட்டி கண்மாய்

18 ஆண்டுகளாக நீர் வரத்தின்றி வறட்சியான முருகன்பட்டி கண்மாய்

சின்னாளபட்டி: ஆக்கிரமிப்புகளால் முருகன்பட்டி போலய கவுண்டன் கண்மாய் 18 ஆண்டுகளாக நீர் வரத்தின்றி வறண்டுள்ளது. உள்ளாட்சி அமைப்பின் அலட்சியத்தால் கழிவுநீர் தேங்கும் பகுதியாக மாறியுள்ளது. இதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆத்துார் ஒன்றியம் அம்பாத்துறை முருகன்பட்டியில் பழமையான போலயகவுண்டன் கண்மாய் உள்ளது. விவசாய கிணறுகள், ஆழ்துளை குடிநீர் கிணறுகளின் அடிப்படை ஆதாரமாகும். திண்டுக்கல் -மதுரை தேசிய நெடுஞ்சாலை அருகே சுமார் 18 ஏக்கர் பரப்பிலான இக்கண்மாயின் வரத்து வாய்க்கால் ஆக்கிரமிப்பாளர்களால் தடைபட்டுள்ளது. போதிய நீர் வரத்தின்றி இப்பகுதி நிலத்தடி நீர் ஆதாரம் சில ஆண்டுகளாக வெகுவாக பாதித்துள்ளது. நான்கு வழிச்சாலை வரத்து ஓடைகளில் தடைகளால் வழித்தடங்கள் துார்ந்துள்ளன. தண்ணீர் வராத சூழலில் கண்மாய் முழுவதும் புதர் மண்டியுள்ளது. கரையோர குடியிருப்புகளில் விஷப் பூச்சிகள் நடமாட்டம் தாராளமாக உள்ளது. உள்ளாட்சி அமைப்புகள், அதிகாரிகள் அலட்சியத்தால், இப்பகுதியின் நிலத்தடி நீராதாரம் பாதித்துள்ளது. நிரந்தர குடிநீர் ஆதாரத்தை மீட்கும் வகையிலான மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கையை மக்கள் எதிர்நோக்கி உள்ளனர்.

வழித்தடத்தை மீட்க வேண்டும்

மனோகரன்,சமூக ஆர்வலர்,முருகன்பட்டி : கண்மாயின் கிழக்கு பகுதியிலிருந்து சிறுமலை கரடு மலை காட்டு ஓடைகளின் வரத்து நீர் இருந்தது. இதன் வழித்தடத்தை மறித்து திண்டுக்கல் -மதுரை ரோடுக்கான நான்கு வழிச்சாலை பணியின்போது இந்த கண்மாயில் இருந்த மண் பயன்படுத்தினர். வரத்து நீருக்காக வழித்தடம் அமைக்கவில்லை. மறுகால் செல்லும் தடங்களும் தடுக்கப்பட்டு உள்ளன. இக்கண்மாய்க்கு 18 ஆண்டுகளாக நீர் வரத்தின்றி வறண்டு கிடக்கிறது. வழியோர ஆக்கிரமிப்புகளை அகற்றி கண்மாயை ஆழப்படுத்த வேண்டியது அவசியம். மழைக்காலங்களில் மழை நீர் ஒரு சொட்டு கூட கண்மாயை வந்தடைவதில்லை. மாறாக கிராமத்தின் கழிவுகள் முழுவதும் கால்வாய் வழியே கண்மாயில் வந்து சேருகிறது. கரட்டுஓடை உபரிநீரால் மட்டுமே இக்கண்மாய்க்கு வரத்து அதிகரிக்க வாய்ப்பு கிடைக்கும்.

--கழிவுகளால் சுகாதாரக்கேடு

எல்.கார்த்திகேயன்,விவசாயி, முருகன்பட்டி: தொப்பம்பட்டி நீர்த்தேக்கத்திலிருந்து வரும் வழித்தடத்தில் தனியார் ஆக்கிரமிப்புகளால் வரத்து நீர் தடைபட்டுள்ளது. வாய்க்கால் சீரமைப்பு, கண்மாய் மேம்பாட்டில் அதிகாரிகள் கவனம் செலுத்தவில்லை. பல ஆண்டுகளாக புகார் செய்தும் ஆக்கிரமிப்பு பகுதிகளை மீட்க நடவடிக்கை இல்லை மிகப்பெரிய கண்மாய் தற்போது குட்டையாக மாறி உள்ளது. இதனால் இப்பகுதி நிலத்தடி நீர் ஆதாரம் பாதித்துள்ளது. மேற்கு பகுதியில் கழிவுநீர் வாய்க்காலை இணைத்துள்ளனர். திடக்கழிவு மேலாண்மை இப்பகுதியில் பெயரளவில் கூட நடப்பதில்லை. சேகரமாகும் பாலித்தீன் கழிவுகளை இதே கால்வாயில் கொட்டுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ