உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பீக் அவர்சில் பாலப்பணிகள்; 2 மணி நேரம் நின்ற வாகனங்கள்

பீக் அவர்சில் பாலப்பணிகள்; 2 மணி நேரம் நின்ற வாகனங்கள்

ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் திண்டுக்கல் ரோட்டில் முன்னறிவிப்பின்றி போக்குவரத்தை நிறுத்தி பீக் அவர்சில் பாலப்பணிகளை செய்ததால் 2 மணி நேரமாகபல கிலோமீட்டர் துாரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் வெளியூர் பயணிகள், பள்ளி மாணவர்கள் அவதிக்கு ஆளாகினர்.ஒட்டன்சத்திரம் திண்டுக்கல் நான்குவழிச்சாலையில் லெக்கையன்கோட்டை, செம்மடைப்பட்டி இடையே ரோடு விரிவாக்க பணிகள் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மூலச்சத்திரம் பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த பாலத்தில் ஸ்லாப் பொருத்தும் பணி நேற்று மாலை 4:15 மணிக்கு தொடங்கியது. இதனால் ரோட்டில் இரு பக்கங்களிலும் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. இரண்டு மணி நேரத்திற்கு மேலாக பணிகள் நடந்ததால் வாகனங்கள் செல்ல முடியாமல் ஆங்காங்கே நின்றன. இதில் பள்ளி வாகனங்களும் அடங்கும். பொதுவாகவே மாலை நேரங்களில் வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும். நேற்று அமாவாசையை முன்னிட்டு கோயில்களுக்கு செல்லும் பக்தர்கள் வாகனங்கள் அதிகமாக இருந்தது. இதையெல்லாம் கருத்தில் கொள்ளாது பீக் அவர்ஸ் ஆன மாலை வேளையில் முன் அறிவிப்பின்றி இப்பணியை மேற்கொண்டதால் வெளியூர் பயணிகள், மாணவர்கள் குறித்த நேரத்தில் வீடுகளுக்கு செல்ல முடியாமல் தவித்தனர். முன்கூட்டியே அறிவிப்புச் செய்து வாகனங்களை மாற்றுப்பாதையில் செல்ல அறிவுறுத்தி இருக்கலாம். போக்குவரத்து போலீசாரும் இதுகுறித்து அக்கறை காட்டாததால் வாகனங்கள் பல கிலோமீட்டர் துாரம் நகர முடியாமல் நின்ற இடத்திலேயே நின்றது. இதனால் பலரும் பாதிக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ