உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழுதான ரோடுகள், அச்சுறுத்தும் தண்ணீர் தொட்டி சிரமத்தில் சிங்காரக்கோட்டை ஊராட்சி மக்கள்

பழுதான ரோடுகள், அச்சுறுத்தும் தண்ணீர் தொட்டி சிரமத்தில் சிங்காரக்கோட்டை ஊராட்சி மக்கள்

வடமதுரை: பழுதான ரோடுகள், அச்சுறுத்தும் தண்ணீர் தொட்டி என பல்வேறு பிரச்னைகளின் மத்தியில் சிங்காரக்கோட்டை ஊராட்சி மக்கள் பரிதவிக்கின்றனர்.எஸ்.பாறைப்பட்டி, பெரியரெட்டியபட்டி, துாரிபுரம், இந்திரபுரி, காட்டுப்புதுார், சின்ன ரெட்டியபட்டி, எஸ்.குரும்பபட்டி, நேருஜிநகர், சிங்காரக்கோட்டை, கவுண்டன்பட்டி, காமராஜ்நகர், அகிலாண்டபுரம் கிராமங்களை உள்ளடக்கிய இந்த ஊராட்சியில் உள்ள எஸ்.பாறைப்பட்டியில் 32 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட 10 ஆயிரம் லிட்டர் மேல்நிலைத்தொட்டி சேதமடைந்து துாண்கள் பலமிழந்து வருகிறது. பாறைப்பட்டி மந்தையில் தேங்கும் சகதியால் மக்கள் அவதிப்படுகின்றனர். ஊராட்சி பகுதியை பிற பகுதிகளுடன் இணைக்கும் சின்னரெட்டியபட்டி காட்டுப்பட்டி ரோடு, அக்கரைப்பட்டி ரோடு, சிங்காரக்கோட்டை புதுகலிங்கம்பட்டி ரோடு, பாறைப்பட்டி பெரியரெட்டிபட்டி வழியே சின்னரெட்டிபட்டி ரோடு என பல முக்கிய ரோடுகள் சேதமடைந்துள்ளதால் மக்கள் சிரமத்தில் உள்ளனர்.

-தெரு விளக்குகள் வேண்டும்

ஆர்.அய்யலு, தலைவர், நாகநாத சுவாமி அறக்கட்டளை, சிங்காரக்கோட்டை: திண்டுக்கல்லில் இருந்து புகையிலைப்பட்டி வழியே சிங்காரக்கோட்டை வந்து சென்ற தனியார் பஸ் தற்போது வராததால் மக்கள் சிரமப்படுகின்றனர். இப்பகுதியில் ஏராளமான மின்கம்பங்கள் சேதமடைந்து ஆபத்தாக உள்ளன. இவற்றை மாற்றி அமைக்க வேண்டும். அகிலாண்டபுரம் பகுதியினர் சிங்காரக்கோட்டையில் இறங்கி நடந்தே ஊர் செல்கின்றனர். இந்த ரோட்டில் மயானம் அருகில் இரு தெரு விளக்குகள் அமைக்க வேண்டும்.

-குடியிருப்புகளுக்கு ஆபத்து

டி.சக்திவேல், வியாபாரி, எஸ்.பாறைப்பட்டி: பாலசமுத்திரம் குளத்தின் மறுகால் நீர் எஸ்.பாறைப்பட்டி வழியே ஓடையாக பயணித்து பொம்மிசெட்டி குளத்தை அடைகிறது. இதன் மேல் பகுதியில் இருக்கும் 10க்கு மேற்பட்ட குளங்களின் நீர் ஒருசேர பயணிக்கும் நிலையில் அதிகபடியான நீர் செல்லும். அந்த வகையில் 2005ல் ஏற்பட்ட நீர்வரத்தால் கிராமத்தின் பாதியளவிற்கு வெள்ள நீரில் சிக்கி தவித்தது குறிப்பிடதக்கது. இந்த ஓடையில் விடுப்பட்டுள்ள பகுதிகளிலும் தடுப்புச்சுவர் அமைத்து அருகில் இருக்கும் குடியிருப்புகளை பாதுகாக்க வேண்டும்.

அவசியம் -சமுதாய கூடம்

சி.காளிமுத்து, தொழிலாளி, பெரியரெட்டிபட்டி: சில ஆண்டுகளுக்கு முன்னர் பள்ளி கூடும், விடும் நேரங்களில் பெரியரெட்டியபட்டி, சின்னரெட்டியபட்டி கிராமங்களை இணைத்து இயக்கப்பட்ட பஸ் சேவை தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.இதை மீண்டும் இயக்க வேண்டும். பாறைப்பட்டியில் இருந்து பெரியரெட்டியபட்டி வழியே காட்டுபட்டி செல்லும் ரோடு மிகவும் மோசமாக சேதமடைந்து கிடக்கிறது. பெரியரெட்டியபட்டி காளியம்மன் கோயில் அருகில் சமுதாய கூடம் கட்ட வேண்டும்.

நிதி வந்ததும் பணி

ஆர்.மோகன், ஒன்றிய கவுன்சிலர், சின்னரெட்டியபட்டி: பெரியரெட்டியபட்டி, சின்னரெட்டியபட்டியில் வடிகால் கட்டமைப்பு, பாறைப்பட்டி, பெரியரெட்டியபட்டியில் பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டுள்ளது. கவுண்டன்பட்டியில் சிமென்ட் ரோடு, குரும்பபட்டி, அக்கரைப்பட்டி ரோடுகள் புதுப்பித்தல் பணி நடக்கிறது. 2020ல் கொரோனா தொற்று பிரச்னையால் நிதி ஒதுக்கீடு பெரிய அளவில் வழங்கவில்லை. திட்ட நிதி ஒதுக்கீடு வரும்போது ஒவ்வொரு பணியாக செய்து தருவதாக தெரிவித்துள்ளனர்.

-தன்னிறைவு பெற உழைப்பேன்

எம்.விநாயகன், ஊராட்சித்தலைவர்: ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் சிங்காரக்கோட்டை புதுகாலனியில் வீடுதோறும் குடிநீர் இணைப்பு தரப்பட்டுள்ளது. பாறைப்பட்டியில் இரு சிமென்ட் ரோடுகள், சிங்காரக்கோட்டை, எஸ்.குரும்பபட்டியில் அங்கன்வாடி மையங்கள் கட்டப்பட்டுள்ளது. சிங்காரக்கோட்டை, பெரியரெட்டியபட்டியில் கதிர் அடிக்கும் களம் அமைக்கப்பட்டுள்ளது. கிடைக்கும் நிதி ஆதாரத்தை கொண்டு அனைத்து பகுதி மக்களுக்கு பாரபட்சமின்றி வளர்ச்சி பணிகளை செய்கிறோம். ஊராட்சி தன்னிறைவு பெற முழுமனதுடன் உழைப்பேன் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை