| ADDED : ஜூலை 16, 2024 04:11 AM
ஒட்டன்சத்திரம் : ஆடி மாதம் தொடங்க உள்ள நிலையில் காற்றின் வேகம் அளவுக்கு அதிகமாக இருக்கும் என்பதால் திண்டுக்கல் மாவட்டத்தில் ரோடுகளின் ஓரங்களில் உள்ள பராமரிப்பு இல்லாத விழும் நிலையில் உள்ள விளம்பர போர்டுகள், பேனர்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நிறைந்த , மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் மெதுவாக செல்ல வேண்டும் என்பதை அறிவுறுத்தும் வகையில் ஒளிரும் சிவப்பு விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனை ஸ்பான்சர் செய்யும் பல்வேறு நிறுவனங்களின் பெயர் பலகைகளை தாங்கிய பேனர்கள் ரோடுகளின் நடுவில் வைக்கப்பட்டுள்ளன. மாடி வீடுகளில் வர்த்தக நிறுவனங்களில் விளம்பர தட்டிகள் இரும்பு துாண்களை பொருத்தி வைக்கப்பட்டுள்ளன. பல ஆண்டுகளுக்கும் முன்பு அமைக்கப்பட்ட பேனர்கள் மழை, வெயிலால் பாதிக்கப்படுகிறது. நாளடைவில் இவை கீழே விழுவதற்கு தயாரான நிலையில் உள்ளது. ஆடி மாதம் துவங்க உள்ள நிலையில் காற்றின் வேகம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என்பதால் சேதமான போர்டுகள், பேனர்களை கண்டறிந்து அவற்றை அப்புறப்படுத்த வேண்டும். உரிய நேரத்தில் இவற்றை அப்புறப்படுத்தாவிட்டால் பெரும் விபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது. ரோட்டில் செல்லும் வாகனங்கள், பொதுமக்கள் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.ஜூலை 14 ல் வீசிய பலத்த காற்றால் ஒட்டன்சத்திரம் -தாராபுரம் ரோட்டில் தனியார் மருத்துவமனையின் விளம்பர பலகையின் இரும்புச்சாரம் நடுரோட்டில் விழுந்தது. இதேபோல் பழநி பஸ்ஸ்டாண்டிலும் பேனர் ஒன்று கீழே விழுந்தது. நல்வாய்ப்பாக இரு சம்பவங்களிலும் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படவில்லை. உள்ளாட்சித் துறை அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்து ஆபத்தான நிலையில் உள்ள போர்டு ,பேனர்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ......முறையான பராமரிப்பு அவசியம்ரோட்டின் நடுவில் வைக்கப்பட்டிருக்கும் விளம்பர பேனர்கள் ,போர்டுகளை குறிப்பிட்ட கால இடைவெளியில் அவ்வப்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆய்வின் போது போதிய பராமரிப்பு இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டால் உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஒளிரும் விளக்குகளுடன் அமைக்கப்பட்ட இத்தகைய பெயர் பலகைகள் பலவற்றில் விளக்குகள் எரிவது இல்லை. இத்தகைய பெயர் பலகைகளை கண்டறிந்து விளக்குகளை ஒளிரச் செய்ய வேண்டும் ,இல்லையேல் அப்புறப்படுத்த வேண்டும். போர்டுகள் அமைக்கும் நிறுவனங்களும் இதில் தனிக் கவனம் செலுத்த வேண்டும். விபரீதம் நடந்த பின்பு விழிப்பதை விட அதற்கு முன்பே விழித்து கொண்டால் விபத்தை தடுக்கலாம். விளம்பரதாரர்கள்,சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கூட்டு முயற்சி இதற்கு அவசியம் .- எஸ்.வெங்கடேஷ், பா.ஜ, மேற்கு மாவட்ட வர்த்தக பிரிவு தலைவர், ஒட்டன்சத்திரம்.