| ADDED : ஜூன் 19, 2024 02:23 AM
கொடைக்கானல்:திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலை ரோட்டில் வாகனங்கள் விபத்தில் சிக்கி பள்ளத்தில் கவிழாமல் இருக்க ரூ.8 கோடியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரோலர் கிராஸ் பேரியர் அமைக்கப்படுகிறது.சுற்றுலாத்தலமான கொடைக்கானலுக்கு ஏராளமான வாகனங்கள் தினமும் வருகின்றன. அவ்வப்போது வாகனங்கள் விபத்தில் சிக்கி பள்ளத்தில் கவிழ்கின்றன. இதை தவிர்க்க நெடுஞ்சாலைத்துறை இரும்பு கிராஸ் பேரியர் அமைத்தது. இருப்பினும் விபத்துக்கள் தொடர்ந்தன.இதையடுத்து தற்போது முதன் முறையாக கொடைக்கானல்- பழநி ரோட்டில் ரோலர் கிராஸ் பேரியர் (உருளை தடுப்பான்) அமைக்கும் பணி நடக்கிறது. வாகனங்கள் விபத்தில் சிக்கும் போது பள்ளத்தில் கவிழாமல் இருக்க ரோலர் கிராஸ் பேரியரில் உள்ள குஷன் வாகனத்தை தடுத்து நிறுத்தும். இதன் மூலம் விபத்துக்களை தவிர்க்க வாய்ப்புள்ளது.நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ''ஊட்டி, ஏற்காடு, வால்பாறை பகுதிகளில் ஏற்கனவே ரோலர் கிராஸ் பேரியர் அமைக்கப்பட்டுள்ளது. கொடைக்கானலில் தற்போது இப்பணி நடக்கிறது. பழநி ரோட்டில் 800 மீ., கொடைக்கானல் -வத்தலக்குண்டு ரோட்டில் 700 மீ., என கொடைக்கானல் உட்கோட்டத்தில் ரூ.8 கோடியில் இந்த ரோலர் கிராஸ் பேரியர் அமைக்கப்படுகிறது,'' என்றார்.