பழநி:பழநியில், கோவில் நிர்வாகத்தை கண்டித்து நேற்று வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்திய நிலையில், கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு உணவு, பால், குடிநீர் வழங்கப்பட்டது.திண்டுக்கல் மாவட்டம், பழநி கிரி வீதியில் ஆக்கிரமிப்பு அகற்றம், தனிநபர் வாகனங்கள் செல்ல தடை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவில் கோவில் நிர்வாகம், வருவாய்த்துறையினர் எடுத்து வருகின்றனர்.இந்நிலையில், கிரிவீதி, அருகில் உள்ள வீதிகள் ஆகியவற்றை கையகப்படுத்த முயற்சி செய்வதாக ஹிந்து சமய அறநிலையத்துறை, கோவில் நிர்வாகத்தை கண்டித்து, சில நாட்களுக்கு முன், தி.மு.க.,வை சேர்ந்த பழநி நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி தலைமையில் கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.தொடர்ந்து, நேற்று காலை, 6:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரை பழநியில் அனைத்து கடைகளையும் அடைத்து கவன ஈர்ப்பு போராட்டம் நடத்த நகராட்சி தலைவர் தலைமையில் அழைப்பு விடுக்கப்பட்டது.இதற்கு அ.தி.மு.க., - கம்யூ., - வி.சி.க., - காங்., உட்பட, 33 கவுன்சிலர்கள், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, ஹிந்து வியாபாரிகள் நலச்சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் ஆதரவு தெரிவித்திருந்தன. நேற்று காலை முதல் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்த நிலையில், பால், மருந்து கடைகள் மட்டும் திறந்திருந்தன.தொடர்ந்து, கோவிலுக்கு வந்த பக்தர்களுக்காக பழநி கோவில் நிர்வாகம் சார்பில் இணை கமிஷனர் மாரிமுத்து தலைமையில் கிரி வீதி பாத விநாயகர் கோவில், தண்டபாணி நிலையம், வின்ச் ஸ்டேஷன், ரோப் கார் ஸ்டேஷன், சுற்றுலா பஸ் நிலையங்கள் ஆகியவற்றில் உணவு, பிஸ்கட் பாக்கெட், பழங்கள், பிரட் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.கிரி வீதி முழுதும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்யப்பட்டிருந்தது. கோவிலில், 8,000 பேருக்கு மேல் அன்னதானமும், குழந்தைகளுக்கு பாலும் வழங்கப்பட்டன. இதனால் பக்தர்கள் சிரமம் இன்றி சுவாமி தரிசனம் செய்தனர்.