| ADDED : ஜூலை 11, 2024 06:21 AM
வேடசந்துார்: வேடசந்துார் கொல்லம்பட்டறை வளைவில் உள்ள காவிரி குடிநீர் குழாயில் 24 மணி நேரமும் தண்ணீர் வரும் நிலையில் அங்கு சேரும் கழிவுநீர் வெளியேற வழி இல்லாததால் குளம் போல் தேங்கி நிற்கிறது. மெயின் ரோட்டிலும் கழிவுநீர் செல்வதால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.கரூர் காவிரி ஆற்றில் இருந்து வேடசந்துார் ,ஒட்டன்சத்திரம் பகுதிகளுக்கு செல்லும் காவிரி குடிநீர் குழாய் வேடசந்துார் கொல்லம்பட்டறை வழியாக செல்கிறது. இங்குள்ள வளைவில் இப்பகுதி மக்கள் 24 மணி நேரமும் தண்ணீர் பிடிக்கும் வகையில் ஒரு பைப் லைன் அமைத்து தொடர்ந்து குடிநீர் விநியோகம் நடைபெறுகிறது. சுற்றுப்பகுதி மக்கள் மட்டுமின்றி நகர் பகுதிக்கு வந்து செல்லும் மக்களும் குடிநீர் கேன்களில் பிடித்து செல்கின்றனர். நுாற்பாலைகளுக்கு தொழிலாளர்களை ஏற்றி செல்லும் வாகனங்களும் அங்கு நிறுத்தி குடிநீர் கேன்களில் தண்ணீர் பிடித்து செல்வது வாடிக்கையாக உள்ளது.குழாயில் தண்ணீர் பிடிக்கும் போது, குடங்களை கழுவும் போதும் வெளியேறும் நீர், குடிநீர் பைப் அருகிலே தெப்பம் போல் தேங்கி நிற்கிறது. இது நிறைந்து வேடசந்துார் கோவிலுார் ரோட்டில் கழிவு நீராய் ஓடுகிறது. இங்கு எந்நேரமும் மக்கள் தண்ணீர் பிடிப்பதால் ரோடு பகுதிகளில் செல்லும் தண்ணீர் வற்றுவதே கிடையாது. கொல்லம்பட்டறை பஸ் ஸ்டாப் அருகே உள்ளதால் மக்கள் ரோட்டோரம் நின்று பஸ் ஏற கூட முடியாமல் அவதிப்படுகின்றனர். இதை கருதி இங்கு சேரும் கழிவு நீரை குழாய் மூலம் சாக்கடையில் திருப்பி விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதற்கு பேரூராட்சி நிர்வாகம் தான் முயற்சி எடுக்க வேண்டும். டூவீலர்களில் செல்வோர் அவதி
பி.தங்கவேல், ஆசாரி தெரு, வேடசந்துார்: குடிநீர் குழாய் அருகே கழிவு நீர் தேங்கி நிற்பது மட்டுமின்றி மெயின் ரோட்டில் தொடர்ந்து செல்கிறது. இதனால் இப்பகுதி மக்கள் மட்டுமின்றி இந்த வழித்தடத்தில் டூவீலர்களில் செல்வோரும் அவதிப்படுகின்றனர். கொல்லம்பட்டறை, பஸ் ஸ்டாப் என்பதால் மக்கள் நின்று பஸ் ஏற கூட முடியவில்லை. இப்பகுதியில் ரோட்டை துண்டிக்காமல் குழாய் பதிந்து கழிவு நீரை சாக்கடையில் இணைக்க வேண்டும். கொசுக்கடியும் உள்ளது
மா.பெருமாள், கோட்டை கோடீஸ்வரன் கோயில் பூசாரி, வேடசந்துார்: கொல்லம்பட்டறையில் 24 மணி நேரமும் காவிரி குடிநீர் கிடைப்பதால் ஏராளமான மக்கள் தொடர்ந்து தண்ணீர் பிடித்துக் கொண்டே உள்ளனர். கீழே சிதறுதல் , குடங்களை கழுவி கீழே ஊற்றுதல், கை, கால் கழுவுவதால் இந்நீர் நாளடைவில் கழிவு நீராகி தேங்கி நிற்கிறது. இதனால் மாலை நேரங்களில் கொசுக்கடி கூடுதலாக உள்ளது.