| ADDED : ஜூலை 17, 2024 12:24 AM
குஜிலியம்பாறை : கிராமப்புறங்களில் அரசு , அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளிகளில் 8 ம் வகுப்பு வரை உள்ள நிலையில் 1 முதல் 5 ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அரசு காலை உணவு வழங்கும் நிலையில் அதே பள்ளியில் 6 ம் வகுப்பு படிக்கும் அண்ணனுக்கு உணவு இல்லையே என்ற குமுறல் பெற்றோரிடம் எழுந்துள்ளது .தமிழக அரசால் 1 முதல் 5 ம் வகுப்பு வரையிலான அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் துவக்கியது. மாணவர்களுக்கு இது சிறந்த திட்டம் தான் என்றாலும் கிராம அரசு ,அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளிகளில் ஒரே குடும்பத்தில் இருந்து அண்ணன் தம்பிகள் இருவர் படிக்கிறார்கள் என்றால் 5 ம் வகுப்புக்குள் தம்பியும் 6 ம் வகுப்பிற்கு மேல் அண்ணனும் படிக்கிறார்கள். ஒரே குடும்பத்தில் இருந்து செல்லும் இவர்களில் 5 ம் வகுப்பிற்குள் படிப்பவர்களுக்கு மட்டும் உணவு கிடைக்கும் நிலையில் 6,7,8 க்குள் படிக்கும் அண்ணன் ஏக்கத்தோடு பார்ப்பதாக குமுறல் எழுந்துள்ளது. இதை கருதி நடுநிலைப் பள்ளிகளில் விடுபட்ட 6,7,8 ம் வகுப்பு மாணவர்களுக்கும் காலை உணவு திட்டத்தை துவக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.திருக்கூர்ணம் ஊராட்சி தலைவர் ஆர்.ருக்குமணி கூறியதாவது: திருக்கூர்ணம் ஊராட்சியில் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி ஒன்றில் காலை உணவு திட்ட துவக்க விழாவிற்கு சென்றேன். தம்பிக்கு காலை உணவு வழங்கப்பட்ட நிலையில், 7 ம் வகுப்பு படிக்கும் அண்ணனுக்கு உணவு வழங்கவில்லை. ஏழாம் வகுப்பு மாணவன் ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான். அது பார்ப்பவர்கள் மனதை வருந்த செய்தது.தமிழக அரசு கிராம அரசு ,அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளிகளில் உள்ள ஒட்டுமொத்த மாணவர்களுக்கும் காலை உணவு திட்டத்தை வழங்க வேண்டும் என்றார்.