உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழநியில் இன்று கடை அடைப்பு கோயில் நிர்வாகம் சிறப்பு ஏற்பாடு

பழநியில் இன்று கடை அடைப்பு கோயில் நிர்வாகம் சிறப்பு ஏற்பாடு

பழநி:பழநியில் இன்று கடையடைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் பாதிப்படையாமல் தவிர்க்க கோயில் நிர்வாகம் பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது.பழநி நகராட்சியின் வீதிகள் மற்றும் இடங்களை கோயில் நிர்வாகம் கையகப்படுத்த முயற்சி செய்வதால் அடிவாரம் பகுதியில் உள்ள கடைக்காரர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இன்று (ஜூலை 13) தி.மு.க., தலைமையிலான நகராட்சி உறுப்பினர்கள் கடையடைப்பு நடத்த அழைப்பு விடுத்தனர். இதற்கு அ.தி.மு.க., காங்., வி.சி.க., கம்யூ., கவுன்சிலர்கள், அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, பா.ஜ., ஹிந்து வியாபாரிகள் சங்கம் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். கடை அடைப்பால் பக்தர்கள் பாதிக்கப்படாமல் இருக்க கோயில் நிர்வாகம் சார்பில் காலை 6:00 மணி முதல் 10:00 மணி வரை மலைக்கோயில் 8000 நபர்களுக்கு அன்னதானம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது மேலும் மலைக் கோயிலில் 2000 நபர்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்படும். கிரி வீதியில் உள்ள ஆதரவற்றோருக்கு பாத விநாயகர் கோயில், பாலாஜி ரவுண்டானா, சுற்றுலா பஸ் ஸ்டாண்ட் ரோப் கார் ஸ்டேஷன், வின்ச் ஸ்டேஷன் ஆகியவற்றில் பிஸ்கட், பழங்கள், உணவு பொட்டலங்கள் தண்ணீர் பாட்டில்கள் 20,000 நபர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு வரும் ஆயிரம் குழந்தைகளுக்கு மலை கோயிலில் பால் இலவசமாக வழங்கப்பட உள்ளது. கிரி வீதி, வின்ச், படிப்பாதை, பாலாஜி ரவுண்டானா பகுதிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் முனையத்தில் 56 குழாய்கள் மூலம் குடிநீர் பெறலாம். 19 டேங்குகள் கிரிவீதியை சுற்றிலும் குடிநீர் வசதிக்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாய்கள் மூலம் தண்ணீர் வழங்கப்பட உள்ளது. எனவே கடையடைப்பு குறித்து கவலைப்படாமல் பக்தர்கள் வரலாம் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ