வடமதுரை: வரட்டாறு நீர் வரத்து வாய்ப்பு இருந்தும் ஆக்கிரமிப்பு, பராமரிப்பின்மை போன்றவற்றால் அய்யலுார் தும்மினிக்குளம் கண்மாய் நீரின்றி வறண்டு கிடக்கிறது.உலகிற்கு உணவு வழங்க விவசாயம் முக்கியம். விவசாயம் நடக்க நீர் பாசனம் அவசியம். பல நுாறு ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கொடூர பஞ்சங்களை அனுபவித்த முன்னோர் ஆங்காங்கே மழை காலத்தில் கிடைக்கும் நீரை சேமிக்க ஏரி, கண்மாய், குளம், குட்டைகளை உருவாக்கி பராமரித்தனர். தற்போது புதிதாக குளங்களை உருவாக்காவிட்டாலும் இருப்பதை பாதுகாத்து பராமரிப்பதில் அரசு துறைகள் அக்கறையுடன் செயல்பட வேண்டும். ஆனால் பல இடங்களில் அலட்சியமே உள்ளது.அந்த வகையில் நீர் வரத்து வாய்ப்பு இருந்தும் அலட்சியத்தால் வறண்டு கிடக்கும் குளங்களில் ஒன்றாக அய்யலுார் தும்மனிக்குளம் உள்ளது.அய்யலுார் அடுத்த முடிமலை, புத்துார் பகுதி மலைகளில் உருவாகும் இரண்டு காட்டாறுகள் கெங்கையூரில் ஒன்று சேர்கின்றன. இங்கு கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் இருந்து ஒரு வாய்க்கால் மூலம் கஸ்பா அய்யலுார், களர்பட்டி வழியே தும்மனிக்குளத்திற்கு நீர் வருகிறது. இக்குளம் ஒரு முறை நிரம்பினால் 5 ஆண்டுகளுக்கு சுற்றுப்பகுதி கிணறுகளுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது. மறுகால் பாதையில் அமைந்துள்ள முராரிசமுத்திரம், உப்புகுளம், செய்யார்ராவுத்தர்குளம், உடைகுளம் என பல குளங்களுக்கு நீர் செல்லும். பாலக்குறிச்சி, வடுகபட்டி, சித்துவார்பட்டி, வேங்கனுார் பல கிராமங்களிலும் நிலத்தடி நீர் மட்டம் உயரும். அய்யலுார் பேரூராட்சி நிர்வாகத்திற்கும் குடிநீர் சப்ளைக்கு உதவும்.தும்மனிக்குளத்திற்கான தடுப்பணை நீர் வரத்து வாய்க்கால் 23 முதல் 27 அடி அகலமாக இருந்தது. வாய்க்கால் ஓரத்தில் இருந்த ஒற்றையடி பாதை ரோடான பின்னர் பல இடங்களில் வாய்க்கால் மிகவும் குறுகலாகி பராமரிப்பு இல்லாமல் சில இடங்களில் மண்மேவி மூடப்பட்டுள்ளது. தும்மினிக்குளம் பேரூராட்சி பராமரிப்பிலும், வாய்க்கால், தடுப்பணை பராமரிப்புகள் பொதுப்பணித்துறை வசமும் உள்ளன. எப்போதாவது சிறிது கன மழை பெய்யும்போது ஆற்றில் நீர் பெருக்கெடுத்து செல்லும். ஆனால் வாய்க்கால் பாதை அடைப்பட்டுள்ளதால் தும்மினிக்குளத்திற்கு நீர்வரத்து வாய்ப்பில்லாமல் உள்ளது. நீர் வரத்து வாய்ப்பிருந்தும் குளம் நிரம்பாத நிலை இங்குள்ளது.இதுஒரு புறமிருக்க 1905ல் குளத்தின் பரப்பளவு 37 ஏக்கராக இருந்தது . கால போக்கில் சுற்றிலும் ஆக்கிரமிப்பு அதிகரித்து நீர் பிடிப்பு பரப்பு வெகுவாக குறைந்துள்ளது. இவற்றில் பல இடங்கள் தனியார் பட்டா நிலம் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் நிலை நீடிக்கும் பட்சத்தில் சென்னை போன்ற பெரு நகரங்களில் ஓட்டு அரசியலுக்காக ஏரி, குளங்களை ஆக்கிரமித்து குடியிருப்புகளாக மாற்றிய அவலம் இங்கும் ஏற்படும். தற்போதிருக்கும் இரு போக விளை நிலங்கள் பாசன வசதியிழந்து தரிசு நிலங்களாக , மானாவாரி நிலங்களாக மாறிடும் அபாயம் உள்ளது. -- தரிசுகளாகும் கொடுமை
பி.கே.பி.குமரேசன், கம்யூ., விவசாய சங்க ஒன்றிய செயலாளர், வேங்கனுார்: தும்மனிக்குளம் மூலம் 1,500 ஏக்கருக்கு மேல் நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தது. பல ஆண்டுகளாக வாய்க்கால் பராமரிக்கப்படவில்லை. இதனால் கெங்கையூர் தடுப்பணையில் இருந்து நீர் வரத்து குளத்திற்கு வருவது முற்றிலும் தடைப்பட்டுள்ளது. குளத்தை மீட்க பல ஆண்டுகளாக சட்ட போராட்டத்தையும் தொடர்ந்துள்ளோம். வீட்டுக்கு வீடு மழை நீர் சேகரிப்பு திட்டத்தை வலியுறுத்தும் அரசு ஒரு ஊருக்கே மழை நீரை சேகரித்து வழங்கும் தும்மனிக்குள விஷயத்தில் பாராமுகமாக உள்ளது. எங்கள் நிலங்கள் எல்லாம் தரிசுகளாகும் கொடுமை அரங்கேறி கொண்டு வருகிறது. உயரத்தை அதிகரியுங்க
சி.கே.வேங்கன், மா.கம்யூ., விவசாய சங்க ஒன்றிய தலைவர், அய்யலுார்: வாய்க்கால் பாதையில் அதிகளவில் புதர்கள் வளர்ந்துள்ளன. தடுப்பணையை முறையாக துார்வாரி மறுகட்டமைக்க வேண்டும். குளத்தை முறையாக துார் வார வேண்டும். ரோடு அமைந்ததால் குறுகிய இடங்களில் தனியார் இடங்களை பெற்று தடையின்றி நீர் செல்லும் ஓடையை அகலமாக்குவது அவசியம். குறுகலான இடங்களில் கான்கிரீட் கட்டுமானமாக வடிவமைக்க வேண்டும். அப்போது மண் சரிவு போன்ற சிக்கல்கள் ஏற்படாது. தடுப்பணையின் உயரம் குறைவாக இருப்பதால் குளத்திற்கு நீர் திருப்ப தடுப்பணையின் மீது மண் கரை அமைக்க வேண்டியுள்ளது. தடுப்பணையின் உயரத்தை மேலும் அதிகரிக்க வேண்டும். வாய்ப்பை இழந்தோம்
எஸ்.சிவக்குமார், விவசாயி, வேங்கனுார்: நில அளவீடு பணிபோது 37 ஏக்கருக்கு பதில் 22 ஏக்கர் நிலமே நீர்பிடிப்பு பகுதியாக இருப்பது தெரிந்தது. கோம்பை வரட்டாற்றின் துவக்க இடத்தில் முதல் குளமாக இருக்கும் அய்யலூர் தும்மனிக்குளம் வாய்க்கால் பராமரிப்பு இல்லாததால் நீர் பெறமுடியாமல் உள்ளது. தும்மினிக்குளம் நிரம்பினால் மறுகாலில் அமைந்துள்ள தீத்தாகிழவனுார், வேங்கனுார் நிலங்களுக்கு பாசன வசதி கிடைக்கும். மறுகால் பாதையில் அமைந்துள்ள முராரிசமுத்திரம், உப்புகுளம், செய்யார்ராவுத்தர்குளம், உடைகுளம் என பல குளங்களுக்கு நீர் செல்லும். அப்பகுதி முழுவதும் நிலத்தடி நீர் மேம்படும். இந்த வாய்ப்பை இழந்துள்ளோம். மாவட்ட நிர்வாகம் கெங்கையூர் தடுப்பணை, வாய்க்கால் பாதையை சீரமைத்து தும்மனிக்குளத்திற்கு நீர் கிடைக்க செய்ய வேண்டும்.