| ADDED : ஜூன் 13, 2024 07:03 AM
ஒட்டன்சத்திரம்: பள்ளி மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வந்துள்ளதாக அலைபேசியில் பெற்றோர்களிடம் கூறி நுாதன மோசடியில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஒட்டன்சத்திரம் காந்தி நகரைச் சேர்ந்த ரமேஷ் அலைபேசிக்கு தொடர்பு கொண்ட மர்ம நபர் அவரது விலாசம், மகள் பெயர், மகள் படிக்கும் பள்ளி ஆகியவற்றை கூறி தமிழ்நாடு கல்வி மையம் கல்வி டிபார்ட்மென்டில் இருந்து பேசுகிறேன்.10, பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு மேல் படிப்புக்காக அரசிடமிருந்து ஊக்கத் தொகையாக ரூ.38,500 உங்களது மகள் பெயருக்கு வந்துள்ளது. மாணவிக்கு 18 வயது நிரம்பாததால் பெற்றோரின் வங்கி கணக்கில்தான் பணம் செலுத்த முடியும் என கூறி , கூகுள் பே, போன் பே உபயோகப்படுத்துகிறீர்களா என கேட்டுள்ளார். ரமேஷ் இரண்டும் உள்ளது என கூற , கணக்கில் குறைந்தது ரூ.3 ஆயிரத்திலிருந்து ரூ.4 ஆயிரம் வரை இருந்தால் தான் உதவித்தொகை கணக்கில் ஏறும். இல்லையென்றால் கேன்சல் ஆகிவிடும் என கூறி உள்ளார். சுதாரித்த ரமேஷ் கணக்கில் பணம் இல்லை என கூறி உதவித்தொகையே வேண்டாம் என கூறி இணைப்பை துண்டித்து உள்ளார்.அந்தந்த சீசனுக்கு ஏற்றார் போல் அலைபேசியில் தொடர்பு கொண்டு பண மோசடி செய்வது தொடர்கிறது.தற்போது பள்ளிகள் தொடங்கி உள்ள நிலையில் அதற்கேற்றார் போல் மோசடி கும்பல் வலை விரிக்க தொடங்கி விட்டன. இப்படி பேசுவோரிடம் உஷராக இருப்பதோடு இது தொடர்பாக போலீசில் புகாரளிக்க வேண்டும். போலீசாரும் இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தவதோடு கும்பல் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.