| ADDED : ஜூன் 26, 2024 07:00 AM
கொடைக்கானல் : கொடைக்கானல் நகரில் உடலில் காயங்களுடன் காட்டுமாடு கன்றுகுட்டிகள் நடமாடுவதை வனத்துறையினர் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.கொடைக்கானல் வன உயிரின சரணாலயத்தில் ஏராளமான வன விலங்குகள் உள்ளதாக கூறப்பட்டாலும் கண்ணுக்கு அதிகளவு தென்படுவது காட்டுமாடாகத்தான் உள்ளன. வனப்பகுதியில் அந்நிய மரங்களின் ஆதிக்கத்தால் புல் உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு தேவையான மேய்ச்சல் தாவரங்கள் இல்லாத நிலை நீடிக்கிறது. இதனால் உணவு ,தண்ணீர் தேவைக்கு நகர் பகுதியில் காட்டுமாடுகள் சர்வ சாதாரணமாக வந்து செல்கின்றன. சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் இங்கு குடியிருப்பு, விடுதி, ஏரிச்சாலை, பஸ்ஸ்டாண்ட், அண்ணாசாலை உள்ளிட்ட நகர் பகுதியில் அச்சத்தை ஏற்படுத்து விதமாக நடமாடுகிறது. உணவு தேவைக்காக நகரில் குவிக்கப்படும் குப்பை தொட்டிகளிலும் முகாமிடும் அவலமும் நீடிக்கிறது. இது போன்ற நிலையால் வனவிலங்கு, மனித மோதல் ஏற்பட்டு உயிர் பலி, காயங்கள் அவ்வப்போது ஏற்படுகிறது.குடியிருப்புகளில் உள்ள டூவிலர் உள்ளிட்ட உடமைகள் சூரையாடுவதும் ஏற்படுகிறது. இத்தகைய சூழலில் காட்டுமாடுகளுக்குள் ஏற்படும் மோதல்களால் காயங்கள் ஏற்படுகிறது. இது போன்ற சூழலில் சில வாரங்களாக நகர்பகுதியில் மூன்றுக்கு மேற்பட்ட காட்டுமாடு கன்றுக்குட்டி காயத்துடன் நடமாடும் நிலையை காண முடிகிறது. வனச்சரணாலயமாக உள்ள கொடைக்கானலில் இது போன்ற பாதிப்புடன் நடமாடும் காட்டு மாடுகளின் நிலை பரிதாபமாக உள்ளது. வனத்துறை காயத்துடன் உள்ள காட்டு மாடுகளுக்கு சிகிச்சையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.