| ADDED : நவ 21, 2025 05:21 AM
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் உரிமம் பெற்றும் புதுப்பிக்காமல் விற்பனைக்கு வைத்திருந்த 1.5 டன் வெடி பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் கடை உரிமையாளர்கள் இருவரை கைது செய்தனர். டில்லி பயங்கரவாத குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து மாவட்டத்தில் உரிமம் பெற்ற வெடி பொருள் விற்பனை கடைகள் கண்காணிக்கப்பட்டது. திண்டுக்கல் கடைவீதி பகுதி கடையில் உரிமம் புதுப்பிக்கப்படாமல் இருந்தது. மற்றொரு கடையில் உரிமம் இருந்தும் உரிமம் பெற்ற இடத்தில் வெடிபொருட்களை வைக்காமல் வேறு இடத்தில் வைத்துள்ளனர். இக்கடைகள் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் இருந்ததால் டி.எஸ்.பி., கார்த்திக் தலைமையிலான போலீசார் கடை ,கோடவுனில் சோதனை மேற்கொண்டனர். டெட்டனேட்டர், சல்பர், பொட்டாசியம் நைட்ரேட், கரிமருந்து உட்பட 1.5 டன் வெடி பொருட்களை பறிமுதல் செய்தனர். கடையின் உரிமையாளர்களான திண்டுக்கல்லை சேர்ந்த தினேஷ்குமார் 41, நிகில்சிங் 37 , ஆகியோரை வடக்கு போலீசார் கைது செய்தனர். இந்த கடைகளில் வெடி பொருட்களை வாங்கிய நபர்கள் குறித்தும் விசாரிக்கின்றனர்.