| ADDED : பிப் 25, 2024 02:49 AM
திண்டுக்கல்:''அயோத்தி ராமர் கோயிலை தேசத்தின் அடையாளமாக காட்டி ஓட்டு வங்கியாக மாற்ற பா.ஜ., முயற்சிக்கிறது,'' என, திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் சார்பில் லோக்சபா தேர்தலும், அரசியல் சிந்தாந்த சவால்களும், கடமைகளும் என்ற தலைப்பில் நடந்த மாநில அளவிலான பயிற்சி பட்டறையில் அரசியல் தலைமை குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் பேசினார்.அவர் பேசியதாவது: பத்தாண்டு கால மத்திய பா.ஜ., ஆட்சியில் இந்திய குடியரசின் தன்மையை மாற்றுவதற்கான முயற்சிகள் பகிரங்கமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. மதசார்பற்ற ஜனநாயக குடியரசுக்கு நேர் எதிராக ஹிந்து ராஷ்டிரத்தை அமல்படுத்தும் இலக்குடன் வரும் தேர்தலை பா.ஜ., சந்திக்க இருக்கிறது.நாட்டின் எதிர்காலம், மதசார்ப்பற்ற ஜனநாயக குடியரசின் எதிர்காலம், இந்திய அரசியல் சாசனத்தின் எதிர்காலம் ஆகியவற்றுக்கான சவாலாக கருதி பா.ஜ.,வை வீழ்த்த வேண்டிய கட்டாயம் உள்ளது. கூட்டாட்சி கோட்பாடுகளை அவமதித்த பா.ஜ., மாநில உரிமைகளை பறித்து வருகிறது. அரசியல் சாசனத்தின் அடிப்படைத் தூண்களான ஜனநாயகம், மதசார்பின்மை, கூட்டாட்சி ஆகிய மூன்றும் தாக்குதலுக்குட்படுத்தப்பட்டு தகர்க்கப்பட்டு வருகின்றன.லோக்சபாவில் எதிர்கட்சி உறுப்பினர்கள் கடுமையாக ஒடுக்கப்படுகின்றனர். முக்கியமான மசோதக்கள் விவாதம் இல்லாமலே அதிரடியாக நிறைவேற்றப்படுகின்றன. பத்திரிகை கருத்துச் சுதந்திரம் பறிக்கப்பட்டிருக்கிறது.இதனால் அரசை விமர்சிக்க பத்திரிகையாளர்கள் தயங்குகின்றனர். பா.ஜ., அரசு பெருமுதலாளிகளுக்கான கொள்கைகளைத்தான் கடைபிடிக்கிறது.பா.ஜ.,வின் இப்போக்கை எதிர்க்க நாடு முழுவதும் உள்ள 28 கட்சிகள் இணைந்து இண்டியா கூட்டணி உருவாக்கின. பா.ஜ., எதிரான ஓட்டுகளை சிந்தாமல் சிதறாமல் ஒருமுகப்படுத்தப்பட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.