| ADDED : செப் 23, 2011 10:50 PM
பழநி : பழநியில் தேர்தல் விதிமீறி அரசியல் கட்சிகளின் பிளக்ஸ் போர்டுகள்
இருந்த போதும், நேற்று மாலை வரை அவற்றை அகற்றுவதற்கான நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்படவில்லை. நேற்று முன்தினம், உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை
வெளியிட்ட கமிஷன், நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வருவதாக தெரிவித்தது.
கடந்த சட்டசபை தேர்தலுக்கான விதிகள், இத்தேர்தலிலும் அமலில் இருக்கும் என,
அறிவித்திருந்தனர். இருப்பினும் இவற்றில் பல விதிகளை, அதிகாரிகள்
கண்டுகொள்ளவில்லை. பழநி மெயின் ரோடு, பஸ் ஸ்டாண்ட், திண்டுக்கல், தாராபுரம்
ரோடுகளில் அரசியல் கட்சிகளின் பிளக்ஸ் போர்டுகள் அகற்றப்படாமல் உள்ளன.
நகராட்சி அதிகாரி ஒருவர் கூறியது: சட்டசபை தேர்தலின்போது, நகர, பேரூராட்சி
பகுதிகளில் சுவர் விளம்பரங்களை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டது. சொந்த
விழாக்களுக்கு, பிளக்ஸ், கொடிகள் அமைக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
விதிமீறும் வகையில் பிளக்ஸ், கொடிகள் குறித்த செலவின தொ கை, வேட்பாளர்
செலவு கணக்கில் சேர்க்கப்பட்டது. தற்போதைய தேர்தலில் இது தொடர்பான எவ்வித
தகவலும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. தேர்தல் அதிகாரிகளுக்கான கையேடு,
இன்று (நேற்று) தான் இணையதளத்தில் இருந்து 'டவுன் லோடு' செய்யப்பட்டுள்ளது.
இதை படித்த பின் தான், உறுதியான முடிவுகளை மேற்கொள்ள முடியும், என்றார்.
சட்டசபை தேர்தலில் அமலான அனைத்து விதிகளும் பொருந்தும் என, தலைமைத் தேர்தல்
கமிஷனர் அய்யர் தெரிவித்திருந்தார். இருப்பினும் போலீஸ், உள்ளாட்சித்துறை
அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதை தட்டிக்கழிக்கின்றனர்.