உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  திண்டுக்கல் மாநகராட்சி, 5 ஒன்றியங்களில் நவ. 22 வரை காவிரி குடிநீர் சப்ளை நிறுத்தம்

 திண்டுக்கல் மாநகராட்சி, 5 ஒன்றியங்களில் நவ. 22 வரை காவிரி குடிநீர் சப்ளை நிறுத்தம்

தாடிக்கொம்பு: திண்டுக்கல் மாநகராட்சி உட்பட அம்மாவட்டத்திலுள்ள ஐந்து ஒன்றியங்களுக்கு காவிரி குடிநீர் சப்ளை நவ., 22 வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கரூர் காவிரி ஆற்றில் புதுப்பாளையம் தலைமை நீரேற்று நிலைய பகுதியில் இரு குடிநீர் கிணறுகள் அமைத்து ராட்சத குழாய்கள் மூலம் வெள்ளியணை, குஜிலியம்பாறை வழியாக திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளுக்கு காவிரி குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. வழியிலுள்ள குஜிலியம்பாறை, வேடசந்துார், வடமதுரை, சாணார்பட்டி, திண்டுக்கல் என 5 ஒன்றிய பகுதிகள், பாளையம், எரியோடு, வடமதுரை, அய்யலுார், தாடிக்கொம்பு, அகரம், நத்தம் என 7 பேரூராட்சி பகுதிகள், தனியார் தொழிற் சாலைகளுக்கும் காவிரி குடிநீர் விநியோகம் நடக்கிறது. காவிரி குடிநீர் குழாய் பாதையில் கரூர் மாவட்டம் புதுப்பாளையம் நீரேற்று நிலையத்திலிருந்து வெள்ளியணை நீரேற்று நிலையம் வரை ஆயிரம் மீட்டர் நீளத்திற்கு உடைப்பு ஏற்பட்டதால் அதை மாற்றி அமைக்கும் பணிகள் நடக்கின்றன. இதேபோல் கரூர் புதுப்பாளையம் தலைமை நீரேற்று நிலையத்தில் இதுவரை செயல்பட்டு வந்த 175 எச்.பி., குடிநீர் மின் மோட்டார் மாற்றப்பட்டு அதற்கு பதிலாக புதிதாக பவர்புல்லான 425 எச்.பி., மின் மோட்டார் பம்புகள் மாற்றி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் நவ., 16 முதல் 22 வரை காவிரி குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. மக்கள் உள்ளூர் குடிநீர் ஆதாரங்களை பயன்படுத்தி ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்