| ADDED : ஆக 14, 2011 10:20 PM
கொடைக்கானல் : கொடைக்கானலில் பருவமழை பொய்த்த தால், உருளைக்கிழங்கு உற்பத்தியில் சரிவு ஏற்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் மாற்று தொழிலுக்கு மாறும் நிலை ஏற்படும் என, விவசாயிகள் கவலையில் உள்ளனர். மேல்மலை கிராமங் களான பூம்பாறை, மன்னவனூர், பூண்டி கிராமங்களில் 1000 எக்டேரில் உருளைக்கிழங்கு விவசாயம் செய்யப்படுகிறது. குறைந்த முதலீடு, பயிரிட்ட 90 நாளில் மகசூல் என்பதால் விவசாயிகளிடம் ஆர்வம் அதிகம். இவை வட மாநிலங்களுக்கு செல்கின்றன. இந்நிலையில், நடவு செய்யப்பட்ட போது எதிர்பார்த்த மழை இல்லாததால், ஒரு ஏக்கரில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே விளைந்துள்ளன. போதிய விலையும் இல்லாததால் செலவிட்ட தொகையில் பாதி கூட கிடைக்காமல், விவசாயிகள் விரக்தி அடைந்துள்ளனர்.குறிஞ்சிநகர் விவசாயி பரமசிவம் கூறுகையில், ''பயிரிட்ட 30 நாளில் இருந்து 60 நாட்கள் வரை மழை இருந்தால் மட்டுமே நல்ல விளைச்சல் இருக்கும். இந்த ஆண்டு எதிர்பார்த்த மழை இல்லை. தற்போது ஒரு சிப்பம் (45 கிலோ) 600 ரூபாய்க்கு மட்டுமே விலை போகிறது. ஆயிரத்திற்கு மேல் விலை கிடைத்தால் மட்டுமே லாபம்,'' என்றார்.