| ADDED : செப் 17, 2011 09:45 PM
திண்டுக்கல் : ஆசிரியர் கவுன்சிலிங்கில் முறைகேடு நடப்பதாக கூறி கவுன்சிலிங்க் நடக்கும் அறையை ஆசிரியர்கள் முற்றுகையிட்டனர். திண்டுக்கல்லில் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங் நடக்கிறது. கவுன்சிலிங் நடக்கும் அறைக்கு வந்த தமிழ்நாடு ஆரம்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொருளாளர் மோசஸ், மாவட்ட தலைவர் ஜோஸ், செயலாளர் கணேசன் தலைமையிலான ஆசிரியர்கள் கவுன்சிலிங் நடந்த அறையை முற்றுகையிட்டனர்.அவர்கள் கூறியதாவது: கவுன்சிலிங்க் நடப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு காலிபணியிட பட்டியல் வெளியிட வேண்டும். செப்.19 ல் நடக்கும் உதவி ஆசிரியர்களுக்கான பட்டியல் வெளியிடப்படவில்லை. கவுன்சிலிங் துவங்குவதற்கு முன்னதாகவே தனிப்பட்ட முறையில் பல ஆசிரியர்கள் இடமாறுதல் பெற்றுவிட்டனர். தற்போது கண்துடைப்பாக கவுன்சிலிங் நடத்துகின்றனர், என்றனர்.மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் தமிழரசு கூறுகையில், 'கவுன்சிலிங்க் அன்று தான் பட்டியல் ஒட்டுவோம், எந்த முறைகேடும் நடைபெறவில்லை,' என்றார். போலீசார், சமாதானம் செய்ததையடுத்து, ஆசிரியர்கள் கலைந்து சென்றனர்.