| ADDED : செப் 19, 2011 10:36 PM
பழநி : பழநி அருகே அணை பகுதிகள், கண்மாய்களில் ஆக்கிரமிப்பு விவசாயத்தை தடுப்பதில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அலட்சியத்தால், நீர்நிலைகளில் விஷம் கலக்கும் அபாயம் உள்ளது. பழநி அருகே பாலாறுபொருந்தலாறு, வரதமாநதி, குதிரையாறு அணைகள் உள்ளன. இவை தவிர பெரும் பரப்பளவு உள்ள பெரியஅய்யம்புள்ளி, இடும்பன்குளம் உள்ளிட்ட கண்மாய், குளங்கள் உள்ளன. இவை பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. விவசாயம் மட்டுமின்றி சுற்று வட்டார பகுதிகளின் குடிநீர் வினியோகத்திற்காகவும், அணை, கண்மாய்களில் அவ்வப்போது தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.அணை, கண்மாயில் நீர்மட்டம் குறையும் சூழலில், அதற்கேற்ப தனியார் ஆக்கிரமித்து பயறுவகை சாகுபடியை மேற்கொள்கின்றனர். தண்ணீர் குறைய குறைய ஆக்கிரமிப்பு பகுதியும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. குறைந்தளவு நீர் தேங்கி இருக்கும் சூழலில், இவற்றை டீசல்பம்ப் மூலம் விவசாயத்திற்காக பயன்படுத்துகின்றனர். இதனால் நீர்ஆதாரம் மேலும் குறைகிறது. மேலும் சாகுபடி பணிகளுக்காக, பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்துவதால் குடிநீரில் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இவற்றையெல்லாம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் 'மக்கள் பாதித்தால் நமக்கு என்ன,' என்பது போல், ஜீப்பை விட்டு இறங்காமல் வேடிக்கை பார்த்து செல்கின்றனர். இதனால் பழநி பகுதியில் நீர்நிலைகள், விஷமாக மாறி நோய் பாதிப்பை ஏற்படுத்தும் நிலை சிறுக சிறுக உருவாகி வருகிறது. அணை, கண்மாய்களில் நீர் இருந்தால் மட்டுமல்ல, நீர் இல்லாவிட்டாலும் அவற்றை பாதுகாப்பது, பொதுப்பணித்துறை அதிகாரிகளின் பொறுப்பு தான் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணரவேண்டும்.