உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  ஆன்லைன் வர்த்தகத்தில் அதிக வருமானம் எனக்கூறி ரூ.43.86 லட்சம் மோசடி

 ஆன்லைன் வர்த்தகத்தில் அதிக வருமானம் எனக்கூறி ரூ.43.86 லட்சம் மோசடி

திண்டுக்கல்: ஆன்லைன் வர்த்தகம் செய்தால் அதிக வருமானம் பெறலாம் எனக்கூறி வெல்டிங் பட்டறை உரிமையாளரிடம் ரூ.43.86 லட்சம் மோசடி செய்தவர்கள் குறித்து திண்டுக்கல் சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர். திண்டுக்கல் பழைய வக்கம்பட்டியை சேர்ந்தவர் உதயகுமார் 40. வெல்டிங் பட்டறை நடத்தி வருகிறார். செப். 12ல் இவரின் 'வாட்ஸ் ஆப்' எண்ணுக்கு குறுந்தகவல் வந்துள்ளது. அதில் குறிப்பிட்ட செயலியை பதிவிறக்கம் செய்து ஆன்லைன் வர்த்தகம் செய்தால் அதிக வருமானம் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. அதிலிருந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசுகையில் ' குறைந்த முதலீட்டில் அதிக வருமானம் பெறலாம். ஆன்லைன் வர்த்தகத்துக்கான பயிற்சியும் அளிக்கிறோம் 'என மோசடி நபர்கள் ஆசை வார்த்தை கூறி உள்ளனர். இதை நம்பிய உதயகுமார் நகை அடமானம் வைத்தும், வெளிநபர்களிடம் லட்சக்கணக்கில் பணம் பெற்று ஆன்லைன் வர்த்தகம் செய்தார். இதில் அவருக்கு நல்ல வருமானம் கிடைத்தது. மகிழ்ச்சியடைந்த அவர் ரூ.43 லட்சத்து 86 ஆயிரத்து 300-ஐ ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தார். இந்த முதலீடு மூலம் கிடைத்த வருமானம் லாபத்தோடு சேர்த்து ரூ.1 கோடியே 92 லட்சத்து 90 ஆயிரத்து 310 உள்ளதாக அவரின் ஆன்லைன் வர்த்தக கணக்கில் இருப்பு காண்பித்துள்ளது. இதை அவர் தனது சொந்தத்தேவைக்காக வங்கிக்கணக்கிற்கு மாற்ற முயன்றபோது பணம் வந்துசேரவில்லை. அதனால் 'வாட்ஸ்- ஆப்'பில் அறிமுகமானவர்களிடம் பேசியபோது, அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததுடன், மேலும் ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தை முதலீடு செய்ய வலியுறுத்தினர். சிறிது நேரத்தில் வர்த்தக செயலி முடக்கப்பட்டுள்ளது. பண மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த உதயகுமார், திண்டுக்கல் சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்துள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ