திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் பக்தர்களின் வசதிக்காக செயல்படுத்தப்படும் கட்டணமில்லா சேவைகள், திட்டங்களுக்கு இதுவரை ரூ.117.75 கோடி செலவழிக்கப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பழநி முருகன் கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். தமிழகத்தில் கோடிக்கணக்கான ரூபாய் உண்டியல் வருவாய் ஈட்டும் கோயிலாகவும் பழநி முருகன் கோயில் விளங்குகிறது. இங்கு பக்தர்களின் வசதிக்காக ரோப் கார், வின்ச், சிறப்பு கட்டண தரிசனம், வி.ஐ.பி., தரிசனம் உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. இது தவிர நாள் முழுவதும் அன்னதானம், முடிக்காணிக்கை செலுத்துதல், முதலுதவி சிகிச்சை மருத்துவனை, கிரிவீதி பக்தர்களுக்கு இலவச பொட்டலசாதம், நீர்மோர், நாள் முழுவதும் பஞ்சாமிர்த பிரசாதம், சுக்குகாபி, தங்கும் விடுதி, சித்த மருத்துவமனை, காலனி பாதுகாப்பு, பள்ளி மாணவர்களுக்கு உணவு, இலவச திருமணம், பேட்டரி பஸ் வசதி, பாதையாத்திரை பக்தர்களுக்கு அன்னதானம், அன்பு இல்லம், தவில் மற்றும் நாதஸ்வர கல்லுாரி, வேதபாடசாலை, கழிப்பறை, குளியல் அறைகள், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட 23 இனங்களின் கீழ் கட்டணம் இல்லா திட்டங்களும் செயல்படுத்தப் படுகின்றன. இதன் மூலம் நான்கரை ஆண்டுகளில் ரூ. 117 கோடியே 72 லட்சத்து 40 ஆயிரத்து 913 செலவிடப்பட்டுள்ளது. கோடிக்கணக்கானோர் பயனடைந்துள்ளனர். கடந்தக் காலங்களை ஒப்பிடுகையில் இது மிகப்பெரிய சாதனை' என பழநி முருகன் கோயில் ஹிந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மாரிமுத்து தெரிவித்தார்.