| ADDED : பிப் 23, 2024 06:08 AM
மாவட்டத்தில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக கால்நடை வளர்ப்பு உள்ளது. பெரும்பாலான விவசாயிகள் கறவை மாடுகள், செம்மறி ஆடுகள் வளர்ப்பதில் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றனர். தற்போது 100 நாள் வேலை திட்டம் காரணமாக விவசாயத்திற்கான கூலி ஆட்கள் பற்றாக்குறை , கூலி உயர்வு காரணமாக நீர் பிடிப்புள்ள விவசாயிகள் விவசாயத்தை மறந்து தென்னை, மா உள்ளிட்ட மர வகைகளை பயிரிட்டு வருகின்றனர். இதனால் உணவு பொருட்களின் விலை விண்ணை நோக்கி செல்கிறது என்பது தணிக்கதை.இந்தநிலையில் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மழை காலங்களில் திண்டுக்கல் மாவட்டத்தில் போதிய மழை பெய்யவில்லை.இதனால் பெரும்பாலான போர்வெல்கள், கிணறுகளுக்கு போதிய நீர் வரத்து இல்லை. மாவட்டத்திலுள்ள 80 சதவீத குளங்களுக்கு நீர்வரத்து அறவே இல்லை. இதனால் கால்நடை வளர்ப்போர்களுக்கான தீவன பற்றாக்குறை கடுமையாக தீவனங்களை விலை கொடுத்து வாங்க துவங்கி உள்ளனர். தற்போது 50 கத்தைகள் கொண்ட ஒரு சோள தட்டை ரூ. 1500, ஒரு கட்டு வைக்கோல் ரூ.250க்கு விற்கிறது. கலப்பு தீவனம் ஒரு மூடை ரூ. 1600, புண்ணாக்கு ஒரு கிலோ ரூ.55 என விலை உயர்ந்து விற்கிறது. இதே நிலை நீடித்தால் நடப்பாண்டை கடத்துவதே மிக சிரமம் என்கின்றனர் விவசாயிகள். வாழ்வாதாரமாக உள்ள கால்நடைகளை பாதுகாக்க விவசாயிகளுக்கு மானிய விலையில் வைக்கோல்களை வழங்க வேண்டும் என்பது இவர்களின் வேண்டுகோளாக உள்ளது.