உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  திண்டுக்கல் மாவட்டத்தில் தொடரும் மழை இடிந்து விழுந்த வீடு; நிறைந்தது வரதமாநதி

 திண்டுக்கல் மாவட்டத்தில் தொடரும் மழை இடிந்து விழுந்த வீடு; நிறைந்தது வரதமாநதி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் தொடரும் மழை காரணமாக மக்களின் இயல்வு வாழ்க்கை முடங்கிய நிலையில் பழநியில் வீடு இடிந்தது.அங்குள்ள வரதமாநதியும் நிறைந்து வழிகிறது . வட கிழக்கு பருவமழை காரணமாக திண்டுக்கல் மாவட்டத்தில் சில நாட்களாக இடைவிடாது மழை பெய்கிறது. நேற்று காலை முதல் சீரான இடைவெளியில் மழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழக்கை முடங்கியது. வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படாததால் நனைந்து கொண்டே மாணவர்கள் சென்றனர். மாலையில் மாணவர்கள் தொடங்கி அலுவலகம் முடித்து வீடு திரும்புவோர் வரை மழையால் அவதிக்குள்ளாகினர். திருச்சி ரோடு, சந்தைரோடு, சாலை ரோடு, பழநி பைபாஸ், கடைவீதி, ஆர்.எம்.காலனி, நாகல்நகர் நத்தம் ரோடு என பல்வேறு இடங்களிலும் ரோடுகளில் மழைநீர் ஓடியது. பழநி வரதமாநதி நிறைந்து வழிகிறது. ' கொடை' யில் மழை கொடைக்கானல்:- கொடைக்கானலில் நேற்று முன்தினம் இரவு முதல் இடைவிடாது பெய்த மழையால் இயல்பு வாழ்க்கை பாதித்தது. கொடைக்கானல், தாண்டிக்குடியில் சூறைக்காற்றுடன் மிதமாக பெய்தது. குறைவான சுற்றுலா பயணிகள் வருகை தந்த நிலையில் விடுதிகளிலே முடங்கினர். நகரை பனிமூட்டம் சூழ்ந்து வாகனங்கள் முகப்பு விளக்கை எரிய விட்டு சென்றன. காற்றில் ஈரப்பதம் அதிகரித்து கடுங்குளிர் நிலவியது. கொடைக்கானல் மேல்மலை , தாண்டிக்குடி கீழ்மலையில் நேற்று முன்தினம் முதல் மழையால் மின் பாதைகளில் இடையூறு ஏற்பட்டு தொடர் மின்தடை ஏற்பட்டது. தொலை தொடர்பு சேவையும் துண்டிக்கப்பட்டு பொதுமக்கள் அவதியடைந்தனர். விவசாய பணிகள் பாதிக்கப்பட்டன. மழையால் இடிந்த வீடு பழநி: நேற்று முன்தினம் மதியம் முதல் கன மழை பெய்தது. கோதைமங்கலம் ஜவஹர் நகர் பகுதியை சேர்ந்த பகவதிராஜ் மனைவி பாப்பாத்திக்கு சொந்தமான ஓட்டு வீடு மண் சுவர்கள் இடிந்து விழுந்தது. வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் ஏற்படவில்லை. வீட்டை ஆய்வு செய்த அதிகாரிகள் உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.---


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ