| ADDED : மார் 16, 2024 07:24 AM
சின்னாளபட்டி : ''அடிப்படை வசதிகளுக்கான வளர்ச்சி திட்டங்கள் முழுமையாக நிறைவேற்றப்பட்டு வருகிறது'' என அமைச்சர் ஐ.பெரியசாமி பேசினார்.ஆத்துார் ஒன்றியம் முன்னிலைக்கோட்டை, எஸ்.பாறைப்பட்டி ஊராட்சிகளில் அரசின் கனவு இல்ல திட்ட வீடுகளுக்கான பூமி பூஜையை துவக்கி வைத்த அவர் பேசியதாவது: குடிசை இல்லா வீடுகளை உருவாக்க வேண்டும் என நினைத்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. அவரது எண்ணத்தை முதல்வர் ஸ்டாலின் செயல்படுத்தி காட்டுகிறார். ஏழைகளுக்கு கனவு இல்லம் உருவாக்கி கொடுக்கும் இத்திட்டத்திற்கு கருணாநிதியின் பெயர் சூட்டியது மிக பொருத்தமாக உள்ளது. மகளிர் உரிமைத்தொகை, குக்கிராம மகளிருக்கும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக பொறுப்பேற்ற ஒரு ஆண்டில் ஆத்துார் தொகுதியில் ஏராளமான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன. அனைத்து கிராமங்களிலும் ரோடு, ரேஷன் கடை, சமுதாய கூடங்கள் போன்ற திட்டங்கள் முழுமையாக நிறைவேற்றப்பட்டு வருகிறது என்றார்.ஒன்றிய தலைவர் மகேஸ்வரி முருகேசன் தலைமை வகித்தார். தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர் நடராஜன், ஆத்துார் கிழக்கு ஒன்றிய செயலாளர் முருகேசன் முன்னிலை வகித்தனர். பி.டி.ஓ., குமாரவேல் வரவேற்றார்.