உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  மலையடிவார கிராமங்களில் அனுமதியற்ற மின்வேலிகள் மனித, வன விலங்கு பலியை கட்டுப்படுத்துவதில் அலட்சியம்

 மலையடிவார கிராமங்களில் அனுமதியற்ற மின்வேலிகள் மனித, வன விலங்கு பலியை கட்டுப்படுத்துவதில் அலட்சியம்

கன்னிவாடி: மலையடிவார கிராமங்களில் யானை, காட்டுப்பன்றி நடமாட்டத்திற்காக அனுமதியற்ற மின்வேலி தாராளமாகி விட்டது. இதனால் மனித, வன விலங்கு தாக்குதல், பலியாகும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் யானைகள், சிறுத்தை, காட்டுப்பன்றி, காட்டு மாடு, மயில் உள்ளிட்ட வன உயிரினங்கள் உள்ளன. இவை பருவகாலம், சாகுபடி சீசனுக்கு ஏற்ப தங்களின் வழித்தடங்கள், வாழ்விடங்களை மாற்றி முகாமிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளன. மலைப்பகுதி அடிவார கிராமங்களில் பரவலாக தென்னை, வாழை, சவ்சவ், காபி, எலுமிச்சை, மிளகு உள்ளிட்ட சாகுபடி நடக்கிறது. மலைப்பகுதி மட்டுமின்றி அடிவார கிராமங்களிலும் வன உயிரினங்களின் நடமாட்டம் சில ஆண்டுகளாக வெகுவாக அதிகரித்துள்ளது. யானைகள், காட்டு பன்றிகளால் சாகுபடி சேதப்படுத்தப்படும் அவல நிலை தொடர்கிறது. அகழி, சோலார் மின் வேலி போன்ற தடுப்பு நடவடிக்கைகளில் வனத்துறையினர் பெயரளவில் மட்டுமே கவனம் செலுத்துகின்றனர். யானைகளால் சாகுபடி, வீடுகளை சேதப்படுத்தல், விவசாயிகள் பலியாகும் சம்பவங்கள் தொடர்கின்றன. சில ஆண்டுகளாக கன்னிவாடி வனச்சரக பகுதியில் வன ஊழியர் உட்பட பலர் உயிர்பலியான சம்பவங்கள் ஆண்டுதோறும் தொடர்கிறது. யானைகளின் நிரந்தர வழித்தட பகுதியை கண்காணித்து அவற்றை அடர் வனப்பகுதிக்குள் விரட்டும் திட்டமிடலை வனத்துறை கண்டுகொள்ளவில்லை. பட்டாசு வெடிப்பது, புகைமூட்டம் எழுப்புதல் போன்ற நடவடிக்கைகள் ஆவணப்படுத்த மட்டுமே பயன்படுகின்றன. சில வாரங்களாக மீண்டும் மலையடிவார கிராமங்களில் யானைகள், காட்டுப்பன்றி நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதற்காக பெரும்பாலான விவசாயிகள் அனுமதியற்ற மின்வேலி அமைக்க துவங்கி விட்டனர். இதையடுத்து வன உயிரினங்கள் மட்டுமின்றி மனித உயிர்களும் பலியாகி வருகின்றன. இவற்றை கண்காணித்து கட்டுப்பாடுத்தும் நடவடிக்கையில் வனத்துறையினர் அலட்சியம் காட்டி வருகின்றனர். வனவிலங்குகள் மர்மச்சாவு ரஜினி ,சமூக ஆர்வலர், தருமத்துப்பட்டி : தண்ணீர், உணவு தேவைக்காக மலை கிராம விளைநிலங்களில் வன உயிரினங்கள் புகுந்து சேதப்படுத்துவது தொடர்கிறது. பகல் நேரங்களிலும் யானைகள் விளைநிலங்கள், மெயின் ரோடுகளில் உலா வருகின்றன. கிராம பகுதிகளிலும் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. மலையடிவாரத்தில் இருந்து 10 கிலோமீட்டர் துாரத்திற்கு காட்டுப்பன்றி அட்டகாசத்தால் சாகுபடி பாதிப்பு, மனிதர்கள் மீது தாக்குதல் தாராளமாகி விட்டது. தோட்டங்களில் தங்கி விவசாயம் மேற்கொண்டு வந்த பலர் கிராமத்திற்குள் வந்து விட்டனர். இது தவிர கடமான், காட்டுப்பன்றி மர்மமான முறையில் இறந்து கிடக்கும் சம்பவங்களும் தொடர்கிறது. ஏட்டளவு நடவடிக்கை சிவாஜி ,ஹிந்து முன்னணி நிர்வாகி, கன்னிவாடி : யானை நடமாட்டத்தை கட்டுப்படுத்த அவ்வப்போது போட்டோவுக்கு போஸ் கொடுத்து புகை மூட்ட பணிகளை ஆவணப்படுத்துகின்றனர் வனத்துறையினர். கும்கி யானைகளை கொண்டு வந்தும் பயனளிக்கவில்லை. சிறப்பு குழுவினர் வந்தபோதும், யானை கண்காணிப்பில் தொய்வு நிலவியது. அனுமதியற்ற மின்வேலி பிரச்னையில் இதுவரை 5 பேர் இறந்தனர். இதை மின்வாரியமும் ஆய்வு செய்வதில்லை. மரக்கடத்தலில் அரசியல் செல்வாக்கு காரணங்களால் அலட்சியம் காட்டுகின்றனர். ஏட்டளவில் மட்டுமே கண்காணிப்பு நடவடிக்கைகள் உள்ளன. வன உயிரினங்கள் மர்மமான முறையில் இறந்து கிடக்கும் அவலங்கள் அதிகரிக்கிறது. அதே வேளையில் வேட்டை நபர்களும் ஆதிக்கம் காட்டுகின்றனர். தீர்வு அடிவார பகுதி விவசாயிகள் மலைக்கிராம மக்களுடன் இணைந்த நடவடிக்கைகள் மட்டுமே வன உயிரின பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கும். உணவு, தண்ணீர் தேவைக்கேற்ப வனப்பகுதியில் கிடைக்க வனத்துறையினர் ஏற்பாடு செய்ய வேண்டும். வனப்பகுதியில் மரக்கடத்தல் தடுப்பு, வன உயிரின வேட்டை நபர்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். பெயரளவில் கண்காணிப்பு நடவடிக்கை எடுப்பதை தவிர்க்க வேண்டும். அனுமதியற்ற மின்வேலி அமைப்போர் மீது மின்வாரிய, வனத்துறை இணைந்த கண்காணிப்பு, அபராதம், கைது நடவடிக்கைகள் எடுத்தால் மட்டுமே கட்டுப்படுத்தும் தீர்வாக இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்