சித்தையன்கோட்டை; திண்டுக்கல் மாவட்டத்தில் பேரூராட்சிகளில் உறவினர் ஆதிக்கம், செயல் அலுவலர்களின் அலட்சியம், அதிகரிக்கும் முறைகேடுகளால் துணைத் தலைவர்கள், ஆளுங்கட்சி கவுன்சிலர்களிடையே அதிருப்தி அதிகரித்து வருகிறது. திட்ட பணிகள் முடக்கத்தால் அடிப்படை வசதிகளின்றி மக்களும் அவதிப்படுகின்றனர்.உள்ளாட்சி துறையில் 33 சதவீதமாக இருந்த பெண்களுக்கான ஒதுக்கீடு 2016ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா உத்தரவால் 50 சதவீதமாக உயர்ந்தது. நகர்ப்புற அமைப்புகளான மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மட்டுமின்றி ஊரக பிரிவின் மாவட்ட, ஒன்றிய, ஊராட்சி வார்டு கவுன்சில், தலைவர், துணைத்தலைவர் பதவிகளிலும் இந்த ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டது. பெண்களுக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் மகளிர் களமிறக்கப்படுகின்றனர். மகளிருக்கான உள்ளாட்சி அமைப்புகளில் பெரும்பாலானவை தற்போது ஆண்களின் ஆதிக்கத்தில் இருந்து மீளவில்லை. இவற்றில் கையெழுத்து அதிகாரம் மட்டுமே பெண்களுக்கு வழங்கப்படுகிறது. கணவர், தந்தை, சகோதரர், உறவினர் என குடும்ப ஆண்களின் நேரடியான தலையீடு வெளிப்படையாக உள்ளது. ஆண்களின் தலையீடு தவிர்க்க தமிழக முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்தார். இருப்பினும் பல இடங்களில் தற்போது வரை நிர்வாக செயல்பாடுகள் முழுமையாக ஆண்கள் கட்டுப்பாட்டில் உள்ளது.மாவட்டத்தில் 23 பேரூராட்சிகளில், 13 இடங்களில் மகளிர் செயல் அலுவலர்கள் உள்ளனர். தலைவர், செயல் அலுவலர்கள் சிண்டிகேட் அமைத்து செயல்படுகின்றனர். பல இடங்களில் மாதாந்திர, அவசர கூட்டங்கள், ஏட்டளவில் மட்டுமே நடத்தப்படுகின்றன. ஊடகத்தினரையும் அனுமதிக்காமல் ரகசிய பேச்சுவார்த்தை மட்டுமே நடப்பதால் மக்கள் பிரச்னைகளை முன்வைத்து தீர்வு காணும் நடவடிக்கை தவிர்க்கப்படுகிறது. ஒரே கட்சி கூட்டணியை சேர்ந்த துணைத் தலைவர், வார்டு கவுன்சிலர்களை கண்டு கொள்வதில்லை. புறக்கணிப்பு, வெளிநடப்பு, ரோடு மறியல் என எதிர்ப்பை வெளிப்படுத்துகின்றனர்.இப்பிரச்னைகளால் கவுன்சிலர்கள், ஆளுங்கட்சி நிர்வாகிகள் என தனித்தனி அணிகளாக பூசல் அதிகரித்து வருகிறது. திட்டப்பணிகளில் தொய்வு, கட்சியினர் இடையே நிலவும் பூசல் போன்றவை பார்லிமென்ட் தேர்தல் பணியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. மாவட்ட நிர்வாகம், இப்பிரச்னையில் மகளிரின் உரிமையை மீட்க கண்காணிப்பு, கெடுபிடியான கட்டுப்பாடுகளை செயல்படுத்த வேண்டும்.
முறைகேடுகள் தாராளம்
மத்திய, மாநில அரசு திட்டங்கள், வளர்ச்சிப் பணிகள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் உள்ளாட்சி நிர்வாகத்தின் மூலமே மக்களைச் சென்றடைகின்றன. மகளிர் பிரதிநிதிகள் பலர் வெறுமனே போட்டோவிற்கு 'போஸ்' கொடுப்பதற்காக மட்டுமே அழைத்துச் செல்லப்படுகின்றனர். ஆதிக்கப்போக்குடன் ஆண்கள் வெளிப்படையாக செயல்படுகின்றனர். சில பேரூராட்சிகளில் சம்பந்தப்பட்ட பிரதிநிதிகள் மட்டுமின்றி செயல் அலுவலர்களையும் கைப்பாவையாக அடக்கி நிர்வாகத்தை ஆண்கள் வசப்படுத்தி உள்ளனர். மகளிருக்கான ஒதுக்கீடு மட்டுமின்றி அனைத்து நல திட்டங்களின் பலன்களும் ஏட்டளவில் மட்டுமே மக்களை சென்றடைகின்றன. திட்டத்திற்கான ஒதுக்கீடுகளை அதிகாரிகளுடன் கூட்டணி அமைத்து சுரண்டப்படும் அவலம் அதிகரித்து வருகிறது. சில அலுவலகங்களில் எந்த நேரமும் ஆளுங்கட்சி நிர்வாகிகள் ஆக்கிரமித்துள்ளனர். பல ஆயிரம் ரூபாய் வரை பணம் பறிக்கும் அட்டகாசம் அரங்கேறி வருகிறது. பெரும்பாலான செயல் அலுவலர்கள், பேரூராட்சி அலுவலகங்களுக்கு வருவதில்லை. ஒவ்வொரு நாளும் கலெக்டர் அலுவலகம், உதவி இயக்குனர் கலந்தாய்வு, வீடியோ கான்பரன்சிங் கூட்டம், வெளி மாவட்ட பயிற்சி போன்ற காரணங்களை கூறுகின்றனர். சுகாதாரம், குடிநீர், கழிவுநீர் கால்வாய் போன்ற மக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படாததால் அதிருப்தி அதிகரித்து வருகிறது. நடக்காத பணிகளுக்கு செலவு கணக்கு மூலம் முறைகேடுகள் தாராளமாகி விட்டது. ஆளுங்கட்சி கவுன்சிலர்கள், துணைத்தலைவர்களே அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். கையெழுத்து அதிகாரத்தை மட்டுமே கொண்ட பெயரளவு பிரதிநிதிகளாக பெண்களை முடக்கும் நிலைக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இரா.பாலகணேசன்,பா.ஜ., திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர், அய்யம்பாளையம்............