ஒட்டன்சத்திரம்: சாக்கடையில் கெட்டுப்போன உணவுகளை கொட்டுவதால் சுகாதாரக்கேடு , பொது சுகாதார வளாகம் இல்லாததால் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தும் அவலம், ஆக்கிரமிப்புகளால் இடையூறு என ஒட்டன்சத்திரம் நகராட்சி 5 வது வார்டில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்னைகள் அதிகம் உள்ளன.சத்யா நகர், ஏ.பி.பி நகர் கிழக்கு பகுதிகளை உள்ளடக்கிய இந்த வார்டில் அங்கன்வாடி மைய கட்டடம் இடிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் இன்னும் அமைக்கவில்லை. இந்த வார்டு பெண்களுக்கு பொது கழிப்பறை வசதி இல்லை. இதனால் திறந்த வெளியே கழிப்பிடமாக பயன்படுத்தும் அவலம் தொடர்கிறது. சாக்கடை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் பல இடங்களில் இடிந்து காணப்படுகிறது. மேலும் பல இடங்களில் சாக்கடை குறுகலாக இருப்பதால் கழிவுநீர் தேங்கி உள்ளது. அவற்றுக்கு பதிலாக புதிய சாக்கடை அமைக்க வேண்டும். தெருப்பகுதியில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக இருப்பதால் நடந்து செல்வதற்கும் வாகனங்களை இயக்குவதற்கும் சிரமமாக உள்ளது. தெருக்களில் உள்ள ரோடுகளும் சேதமடைந்துள்ளன . சாக்கடை மேல் ஆக்கிரமிப்பு
பாட்டான், சமூக ஆர்வலர், சத்யா நகர்: வார்டில் பொது கழிப்பறை வசதி இல்லாததால் திறந்த வெளியை கழிப்பிடமாக பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. இதனால் பெண்கள், குழந்தைகள் சிரமப்படுகின்றனர். சாக்கடை மேலேயே ஆக்கிரமிப்பு இருப்பதால் சாக்கடையை சுத்தம் செய்வதிலும் சிரமம் ஏற்படுகிறது. தெருவில் சேதமடைந்த ரோடுகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சேதமடைந்த சாக்கடை
பெரிய திருமன், அ.தி.மு.க., வார்டு அவைத்தலைவர், சத்யா நகர்: சாக்கடை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டதால் பல இடங்களில் சேதம் அடைந்து காணப்படுகிறது. கழிவுநீர் தேங்கி சுகாதாரக் கேட்டை ஏற்படுத்துகிறது. சாக்கடை வசதி இல்லாத தெருக்களில் சாக்கடை அமைக்க வேண்டும். பழுதடைந்த தெரு விளக்குகளை சீரமைப்பு செய்ய வேண்டும். இறைச்சிக் கழிவுகளால் துர்நாற்றம்
திருமூர்த்தி, முன்னாள் கவுன்சிலர்: விநாயகர் கோயில் அருகில் இருந்த அங்கன்வாடி மையம் இடிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் புதியதாக கட்டுவதற்கான முயற்சி இல்லை. இன்னும் காலி இடமாகவே உள்ளது. இறைச்சிக் கழிவுகள் ,கெட்டுப்போன உணவுகளை சாக்கடையில் கொட்டுவதால் துர்நாற்றம் வீசுகிறது. தெருக்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். அங்கன்வாடிக்கு புதிய கட்டடம்
திருமலைசாமி, கவுன்சிலர் (நகராட்சி தலைவர், தி.மு.க.,): சத்யா நகரில் குடிநீர் பிரச்னை தீர்க்கப்பட்டுள்ளது. போர்வெல்கள் சரி செய்யப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் தண்ணீர் பிடிக்கும் வகையில் சத்யாநகரில் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. புதிதாக குழாய்கள் அமைக்கப்பட உள்ளது. ரேஷன் கடை அமைக்க அமைச்சர் சக்கரபாணியிடம் கோரிக்கை வைத்தோம். நுாலகம் அருகில் புதிய ரேஷன் கடை கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. பழைய ரேஷன் கடையை இடித்து விட்டு அங்கன்வாடிக்கு புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதியோர் உதவித்தொகை வாங்கி கொடுக்கப்பட்டுள்ளது. பட்டா இல்லாதவர்களுக்கு இலவச பட்டாவும் வழங்கப்பட உள்ளது. கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.