கொடைக்கானலில் மீண்டும் உறை பனி : நடுங்க வைக்கும் குளிரால் பயணியர் பரிதவிப்பு
கொடைக்கானல்:கொடைக்கானலில், உறை பனியின் தாக்கம் காரணமாக நடுங்க வைக்கும் குளிரால் சுற்றுலா பயணியர் பரிதவிக்கின்றனர்.சுற்றுலா தலமான கொடைக்கானலில் சில வாரங்களுக்கு முன் பனியின் தாக்கத்தால் கடுங்குளிர் நடுங்க வைத்தது. எனினும் வெப்பச்சலனம், மேலடுக்கு சுழற்சியால் வானிலையில் மாற்றம் ஏற்பட்டு சில தினங்கள் சாரல், மிதமான மழை பெய்தது. இதனால் கொடைக்கானல், தாண்டிக்குடி உள்ளிட்ட மலைப் பகுதிகளில் பனியின் தாக்கம் தணிந்தது.தற்போது, வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையிலும் மதியம் 3:00 மணி முதலே பனியின் தாக்கத்தால் குளிர் நிலவுகிறது. பகல் நேரத்தில் அதிகபட்சமாக 26 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை, இரவில் குறைந்தபட்சமாக 11 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகி வருகிறது.இதற்கிடையே, மன்னவனுார் சூழல் சுற்றுலா மையம், கீழ் பூமி, அப்சர்வேட்டரி, ஏரிச்சாலை பகுதிகளில் உறைபனி நிலவுகிறது. காலை 10:00 மணி வரை பனியின் தாக்கம் நீடிப்பதால் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு உள்ளது. மாறுபட்ட சீதோஷ்ண நிலையால் மலைப்பகுதியினர் ஜலதோஷம், காய்ச்சல் உள்ளிட்டவற்றால் அவதியடைகின்றனர்.