உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கட்டடம் ஓகே ... நுாலகம் எங்கே; அய்யலூரில் பரிதவிக்கும் மக்கள்

கட்டடம் ஓகே ... நுாலகம் எங்கே; அய்யலூரில் பரிதவிக்கும் மக்கள்

வடமதுரை: அய்யலுார் பேரூராட்சி பகுதியில் நுாலகத்துக்காக மூன்று கட்டடங்கள் கட்டி உள்ள போதிலும் நுாலகம் இல்லாததால் சுற்று வட்டார கிராம மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் பரிதவிக்கின்றனர்.அய்யலுார் பேரூராட்சியில் பல கிராமங்கள் உள்ளன.விவசாயமே முக்கிய தொழிலாக நடக்கும் இந்த பகுதியில் தற்போதுதான் கல்லுாரி வந்துள்ளது. நீண்ட காலமாக பள்ளி படிப்புக்கு பின்னர் மேல் படிப்புக்கு திண்டுக்கல், திருச்சி,மணப்பாறை சென்றால் மட்டுமே சாத்தியம் என்ற நிலையில் தற்போது சிறிது மாற்றம் ஏற்பட்டு கல்லுாரி வாய்ப்பு கிடைத்திருப்பது ஆறுதலாக உள்ளது. போட்டி உலகத்தில் அறிவு திறனை வளர்க்க பொது அறிவு, நாட்டு நடப்பு நிகழ்வுகளை தெரிந்து கொள்ளவும்,போட்டி தேர்வுகளை எதிர்கொள்ள விரும்புவோருக்கு அய்யலுார் பகுதியில் நுாலகம் இல்லாதது பெருத்த பாதிப்பை தருகிறது. அதே நேரம் பேரூராட்சி பகுதியில் 3 கட்டடங்கள் நுாலகம் என்ற பெயரில் கட்டப்பட்டு ரேஷன் கடை உள்ளிட்ட வேறு பயன்பாடுகளுக்காக மாற்றப்பட்டுள்ளது . நுாலகத்துக்காக அமைக்கப்பட்ட கட்டடங்களில் நுாலகம் அமைய பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வருந்ததக்க விஷயமே

ஜே.பாலமுருகன், பத்திர எழுத்தர், தங்கம்மாபட்டி: அய்யலுார் பேரூராட்சி அந்தஸ்தில் இருந்தாலும் 2 வார்டுகளை தவிர மற்ற அனைத்தும் கிராமங்களை கொண்டுள்ளது.சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் கடந்தும் சில பகுதிகளுக்கு இன்னும் அடிப்படை வசதிகள் சென்றடையாத நிலையில் இருக்கும் பகுதிகள் பல உள்ளன. உலகத்தையே இயக்கும் அலைபேசி சேவை கிடைக்காத பகுதிகளும் நிறையவே உள்ளது. இந்த பகுதியினருக்கு நுாலக சேவையும் கிடைக்காதது மிகவும் வருந்ததக்க விஷயமாகும். சட்டசபை குழுவிடம் மனு தந்தேன். அதற்குநுாலகத்துறை தந்த பதிலில், இடமும், டெபாசிட் தொகை செலுத்தினால் அய்யலுாரில் நுாலகம் அமைக்கலாம் எனத் தெரிவித்துள்ளனர். இதன் மீது பேரூராட்சி நிர்வாகம்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இல்லாத நுாலகத்துக்கு வரி

பி.தமிழ்ச்செல்வன், சமூக ஆர்வலர், குளத்துப்பட்டி: அய்யலுார் பகுதி இளைஞர்கள் நாளிதழ்கள், தேவையான புத்தகங்கள் படிக்க வடமதுரை நுாலகத்திற்கே செல்ல வேண்டியுள்ளது. என்னை போன்ற சுற்றுப்பகுதி கிராமங்களில் வசிப்போருக்கு போக்குவரத்து சிரமமும், செலவும் கூடுதல் சுமையாகிறது. அரசு துறைகளிலும் நுாலக வரி என்ற பெயரில் வசூலிக்கப்பட்டும் அய்யலுாரில் மட்டும் நுாலகம் இல்லாதது வருத்தம் தரும் விஷயம்.

-நடவடிக்கை எடுங்க

ஏ.பரமசிவம், தொண்டு நிறுவன நிர்வாகி, பெருமாள்கோவில்பட்டி: அய்யலுார் பேரூராட்சி பகுதியினர் மட்டுமின்றி சுக்காம்பட்டி,மோர்பட்டி, புத்துார் பகுதி மாணவர்கள், இளைஞர்கள் அய்யலுாருக்கு படிக்க வருகின்றனர். விடுமுறை நாட்கள், காலை, மாலை நேரங்களில் பொது அறிவு, நாட்டு நடப்பு நிகழ்வுகளை தெரிந்து கொள்ளவும், போட்டி தேர்வுகளை எதிர்கொள்ள விரும்பும் மாணவர்களுக்கு நுாலகம் இல்லாதது பெரும் பாதிப்பாக உள்ளது. இதை கருதி அய்யலுாரில் நுாலகம் அமைய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை