திண்டுக்கல் : ரோடு வசதிஇல்லை ,குப்பை , தெருநாய்கள் பிரச்னை என வளர்ச்சி பணிகள் எதுவும் இல்லாமல் தவிக்கும் நிலையில் பள்ளப்பட்டி ஊராட்சி மக்கள் உள்ளனர்.கொட்டப்பட்டி, பாறைப்பட்டி, பெரிய பள்ளப்பட்டி, முருகபவனம், ஏ.பி.நகர், எம்.ஜி.ஆர்.நகர், பிஸ்மி நகர், புதுப்பட்டி, பூதமரத்துப்பட்டி, குட்டியபட்டி பிரிவு பகுதிகளை உள்ளடக்கிய இந்த ஊராட்சியில் பெயரளவிற்கு ரோடுகள் போடப்பட்டு தரமற்று பள்ளம் மேடுகளாய் உள்ளது. சாக்கடை அமைத்தும் கழிவு நீர் வெளியேற முடியாமல் தேங்கி உள்ளது. எம்.எஸ்.எஸ்.நகரில் கட்டப்பட்ட மேல்நிலைத்தொட்டி உபயோகமின்றி உள்ளது.தனிநபர் கழிப்பறை திட்டம் நிறைவேற்ற படாததால் திறந்த வெளி கழிப்பிட போக்கு தொடர்கிறது.. நாயுடு தெருவில் சுகாதார வளாகம் கட்டும் பணி ஆரம்பம் முதலே தடுக்க பட்டதால் அந்த திட்டமும் கைவிட்டு போனது . துாய்மை பணியாளர்கள் சரிவர வராததால் குப்பை தேங்கி உள்ளது. தெருநாய்கள் தொல்லையால் மக்கள் நொந்துள்ளனர். நாய்களை கட்டுப்படுத்துங்க
கேசவபெருமாள், தனியார் ஊழியர்: தெரு நாய்கள் நடமாட்டத்தால் இரவில் வர சிரமமாக உள்ளது. ஊராட்சி நிர்வாகம் தெருநாய்களை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டதாகதெரியவில்லை. இதனால் குழந்தைகள் தெருவில் விளையாடவும் அச்சப்படும் சூழல் நிலவுகிறது. குப்பையால் தொல்லை
சகுந்தலா, குடும்ப தலைவி: குப்பை பிரச்னைதான் பெரிய தலைவலியாக உள்ளது. குப்பை சேகரிக்க பணியாளர்கள் இல்லாததால் தெரு முழுவதும் ஆங்காங்கே குப்பை தேங்கி கிடக்கின்றன. பொதுமக்களே குப்பையை தீயிட்டு எரிக்கும் சூழல் உள்ளது. இதனால் பல இடங்களில்கரும்புகை ஏற்பட்டு ஆஸ்துமா வியாதிகாரர்களை ஆபத்தான சூழலுக்கு கொண்டு செல்கிறது. குப்பையை அகற்ற ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். சாக்கடையை துார்வாருங்க
வசந்தா, குடும்ப தலைவி: நாங்கள் வசிக்கும் ஓம் சக்தி தெரு நகர் 2வது தெரு முனையில் சாக்கடை நீர் வழிமறித்து ஓடுகிறது. கழிவுகளை மிதித்துதான் வீட்டிற்குள் செல்லும் நிலை உள்ளதால் பலர் நோயின் பிடியில் உள்ளனர். சாக்கடையை துார்வாரி கழிவு நீரோடைக்கு வழிவகுத்தால்தான் நிம்மதி ஏற்படும். இதுபற்றி பலமுறை ஊராட்சியில் முறையிட்டும் வருகிறோம். படிப்படியாக பணி
பரமன், ஊராட்சி தலைவர், பள்ளப்பட்டி: நாயுடு தெரு சுகாதார வளாகம் கட்ட நிலத்தடி ஊற்று நீர் தடையாக உள்ளதால் திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது. தகுந்த ஆலோசனைக்கு பின் மேல் நடவடிக்கை எடுக்கப்படும். எம்.எஸ்.எஸ்.நகரில் நிலத்தடி நீர் சப்ளை எங்களுக்கு வேண்டாம் என ஏரியாவாசிகள் கூறியதால் பயன்பாடின்றி கிடந்தது. விரைவில் காவிரி நீர் ஏற்றத்துடன் பணிகள் துவங்கும். பிஸ்மி நகர் பேவர் பிளாக் ரோடு, ஓம் சக்தி நகர் கோயில் பாதை பணிகள் நடந்துள்ளன என்றார்.