| ADDED : ஜன 31, 2024 07:00 AM
திண்டுக்கல், : திண்டுக்கல் மாநகராட்சி 13வது வார்டு ரோமன் மிஷன் சந்து பகுதியில் குப்பையில் உரம் தயாரித்து மாடித்தோட்டத்தில் காய்கறிகள் உற்பத்தி செய்த 3 குடும்பத்தினருக்கு மாநகராட்சி அதிகாரிகள் பரிசு வழங்கி கவுரவித்தனர்.திண்டுக்கல் மாநகராட்சி தரப்பில் 48 வார்டுகளிலும் சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பொதுமக்கள் குப்பையை தரம்பிரித்து வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.அதன்படி மக்களும் மக்கும், மக்காத குப்பையை துாய்மை பணியாளர்களும் வழங்குகின்றனர். மாநகராட்சி அதிகாரிகளும் குப்பையை தரம்பிரித்து வழங்கினால் தான் நுண் உர செயலாக்க மையங்களில் எளிதில் உரம் தயாரிக்க முடியும் என தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.இருந்தபோதிலும் ஒருசிலர் இன்னும் குப்பையை தரம்பிரிக்காமல் வழங்குகின்றனர். திண்டுக்கல் மாநகராட்சி 13வது வார்டு ரோமன் மிஷன் சந்து பகுதியை சேர்ந்த 3 குடும்பத்தினர் தங்கள் வீடுகளில் மீதமான குப்பையை சேமித்து உரமாக மாற்றி மாடியில் தோட்டம் அமைத்து துளசி, தக்காளி, மிளகாய், அழகு தாவரங்கள்,காய்கறிகளை வளர்த்தனர். அவர்களை கவுரவிக்கும் விதமாக திண்டுக்கல் மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன், மாநகர நல அலுவலர் பரிதாவணி உள்ளிட்டோர் நேரில் சென்று பரிசு வழங்கினர்.