UPDATED : டிச 04, 2025 05:58 AM | ADDED : டிச 04, 2025 05:47 AM
சின்னாளபட்டி: வாக்காளர் சிறப்பு திருத்த பணியின் நீக்க பரிந்துரையில் குளறுபடி உள்ளதாக அமைச்சர் ஐ.பெரியசாமி புகார் அளித்த நிலையில், இப்பட்டியலில் இடம் பெற்ற சின்னாளபட்டி வாக்காளர்கள் பலர் நேற்று மீண்டும் மனு அளிக்க குவிந்தனர். ஆத்துார் தொகுதிக்கு உட்பட்ட சின்னாளபட்டி பேரூராட்சி பகுதியில் வாக்காளர் சிறப்பு திருத்த பணியில் குளறுபடி தொடர்பாக அமைச்சர் ஐ.பெரியசாமி சமீபத்தில் தேர்தல் ஆணையத்திற்கு புகார் அனுப்பி இருந்தார்.
இதில் அலுவல், வியாபாரத்திற்காக வெளியூர் சென்றோர் உட்பட பலர் இடம் மாறி சென்று விட்டதாக நீக்க பரிந்துரையில் இடம் பெற்றுள்ளதாகவும், ஓட்டுரிமை வழங்க வலியுறுத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில் நேற்று சின்னாளபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் உள்ள வாக்காளர் திருத்த பணி முகாமில் பரிந்துரை நீக்க பட்டியலில் இடம்பெற்ற 40க்கு மேற்பட்ட வாக்காளர்கள் குவிந்தனர். மீண்டும் பட்டியலில் சேர்க்க மனு அளித்தனர். வி.எம்.எஸ்., காலனி மல்லிகா, மேட்டுப்பட்டி ஏ.கே.எஸ் தெரு ஆர்.மாலு, சவுதா ஆகியோர் கூறுகையில், விண்ணப்ப படிவத்தை வழங்குவதற்கும், திரும்பப் பெறவும், எந்த ஒரு அதிகாரியும் நேரில் வரவில்லை. எங்கு பெற்று, நிரப்பி திருப்பி அளிப்பது என்பது குறித்த தகவல் தெளிவாக தெரிவிக்கப் படவில்லை. அமைச்சர் புகார் எழுப்பிய சூழலில் தற்போது அரசியல் பிரமுகர்கள் மூலம் தகவல் தெரிய வந்ததால் மீண்டும் மனு அளிக்க வந்துள்ளோம் என்றனர்.