சாணார்பட்டி, : -சாணார்பட்டி அருகே புகையிலைபட்டியில் கோலாகலமாக நடந்த ஜல்லிக்கட்டில் காளையர்கள் போட்டி போட்டு காளைகளை அடக்கினர். இதில் 36 பேர் காயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.சாணார்பட்டி மடூர் ஊராட்சிக்குட்பட்ட புகையிலைபட்டியில் சந்தியாகப்பர்,செபஸ்தியார் சர்ச் திருவிழாவை முன்னிட்டு புகையிலைப்பட்டி மந்தையில் ஜல்லிக்கட்டு நடந்தது. 734 காளைகளும்,420 வீரர்களும் ஆன்லைனில் பதிவு செய்தனர். ஒரு சுற்றுக்கு 25 பேர் வீதம் வீரர்கள் களம் இறங்கினர். திண்டுக்கல்,தேனி,மதுரை,விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து காளைகள் அழைத்து வரப்பட்டன. காளைகளை மண்டல இணை இயக்குனர் ராம்நாத்,உதவி இயக்குனர் அப்துல் காதர் தலைமையில் கால்நடை மருத்துவர்கள் பரிசோதனை செய்து அனுமதி வழங்கினர். மாடுபிடி வீரர்களுக்கு டாக்டர் அசோக் குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர். முதலில் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதனை யாரும் பிடிக்கவில்லை. உள்ளூர் ,வெளி மாவட்டங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டது. சில காளைகள் யாரிடமும் பிடிபடாமல் சீறிப்பாய்ந்து சென்று தனது உரிமையாளருக்கு பரிசுகளை பெற்றுக் கொடுத்தது. மாடுபிடி வீரர்களும் காளைகளை லாவகமாக பிடித்தனர். பார்வையாளர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். இதில் மாட்டு உரிமையாளரான நத்தம் சேர்வீடு பகுதியைச் சேர்ந்த ஜெயராஜ் 29, புகையிலை பட்டியைச் சேர்ந்த அருள் பிரகாஷ்24,மாடுபிடி வீரர்கள் சின்ன கூத்தம்பட்டியைச் சேர்ந்த சண்முக பாண்டி24,நொச்சி ஓடைப்பட்டியை சேர்ந்த பவுல் வினோத் ராஜ்35 உள்ளிட்ட 36 பேர் காயமடைந்தனர். பிடிபடாத காளைகளை பிடித்த மாடுபிடி வீரர்களுக்கு ஆட்டுக்குட்டி,சைக்கிள்,குத்துவிளக்கு,சேர்,அண்டா, பானை, கட்டில்,குக்கர்,ஜல்லிக்கட்டில் சிறப்பாக விளையாடிய காளை,வீரருக்கு ரூ50,000 உள்ளிட்ட பல பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஊர் நாட்டாண்மை சூசை மாணிக்கம்,ஊர் மணியக்காரர் சின்னப்பன்,கோவில் பிள்ளைகள் சின்னப்பன்,ராயப்பன்,ஊர் சேர்வை செல்வராஜ்,ஊர் நாயக்கர்கள் சின்னச்சாமி, துரைராஜ் ஊர் பெரிய பண்ணை ராஜகோபால் செய்தனர்.