| ADDED : ஜூலை 17, 2011 02:29 AM
ஈரோடு: தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு கூட்டம்
ஈரோடு ரயில்வே காலனி மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் நேற்று நடந்தது.மாநில பொதுச் செயலாளர் (பொறுப்பு) முருகசெல்வராசன் நிருபர்களிடம்
கூறியதாவது:தமிழக அரசு உச்சநீதிமன்றத்திலும், உயர்நீதி மன்றத்திலும்,
சட்டசபையிலும் சமச்சீர் கல்வியை கைவிடவில்லை என்ற அறிவிப்பை வெளியிட்டதை
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் வரவேற்கிறோம்.சமச்சீர்
கல்வி பாடநூல்களில் உள்ள குறைபாடுகளை கலைந்து, முழுமையான சமச்சீர் கல்வி
முறையை நடப்பு கல்வி ஆண்டில் அமல்படுத்த வேண்டும். கடந்த மே மாதம் சட்டசபை
தேர்தலின் போது தேர்தல் அறிக்கையில், ஆறாவது ஊதியமாற்று குறைபாடுகள்
களையப்படும், தன்பங்கு ஓய்வூதியத்திட்டம் கைவிடப்படும். மத்திய அரசுக்கு
இணையான ஊதியம் ஆசிரியருக்கு அளிக்கப்படும் என கூறப்பட்டது.அளித்த
வாக்குறுதிகளை தமிழக முதல்வர் நிறைவேற்றித் தர வேண்டும். இது தொடர்பாக
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொறுப்பாளர்களை அழைத்திட
வேண்டும்.கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் அமல்படுத்தப்பட்டு, அனைத்து
ஆசிரியர்களால் வரவேற்பு பெற்ற ஒழிவு மறைவற்ற கலந்தாய்வு குறித்த அரசு ஆணை
வெளியிட வேண்டும். சிட்டிபாபு தலைமையில் பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய
நடைமுறைகள் குறித்து குழு அமைத்து, அக்குழுவின் அறிக்கைப்படி தமிழக அரசு
நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.மாநிலத்தலைவர் கண்ணன்
தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சண்முகம் வரவேற்றார். மாவட்ட துணை
செயலாளர் தாமஸ் ஆண்டணி ஏற்பாடுகளை செய்திருந்தார்.மாநிலப் பொருளாளர் மோசஸ்
நன்றி கூறினார்.