அந்தியூர்: ''மலைப் பகுதியில் வசிக்கும் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள நலிவடைந்த மாணவர்களை ஊக்குவிக்க வங்கிகளில் உடனடி கல்வி கடன் ஏற்பாடு செய்யப்படும்'', என, கலெக்டர் ஆனந்தகுமார் பேசினார். அந்தியூர் அருகே பர்கூர் தாமரைக்கரையில் மனுநீதி நாள் முகாம் நடந்தது. மாவட்ட கலெக்டர் ஆனந்தகுமார் பேசியதாவது: வன விலங்குகள் நடமாட்டத்தை கண்டறிந்து, கட்டுப்படுத்தி, விளை பொருட்களை சேதமாக்காத வண்ணம் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அரசு அனுமதியுடனும், சுற்றுச்சூழல் பாதிக்காத வகையிலும் வனப்பகுதியில் தார்ச் சாலை அமைக்கப்படும். இப்பகுதி மாணவ, மாணவியரை ஊக்கப்படுத்தும் வகையில், உடனடி வங்கி கடன் பெற்றுத் தர ஏற்பாடு செய்யப்படும். எண்ணமங்கலத்தில் மூன்று கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வரும் மாதிரி பள்ளிக்கு, இப்பகுதியை சேர்ந்த மாணவ, மாணவியரை படிக்க அனுப்ப வேண்டும். இப்பகுதியில் அதிகமான மகளிர் சுய உதவிக்குழுக்களை ஏற்படுத்தி, சுய வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும். பால் விற்பனையில் ஆர்வம் காட்ட வேண்டும். பசுமை வீடுகள் திட்டத்தில், பர்கூர் மலைப் பகுதிக்கு முன்னுரிமை அளித்து தொகுப்பு வீடுகள் கட்டித் தரப்படும். இவ்வாறு அவர் பேசினார். பர்கூர் பஞ்சாயத்தை சேர்ந்த 95 பேருக்கு, ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான, முதியோர் உதவி தொகை, கர்ப்பிணி பெண்களுக்கான உதவித்தொகை, சலவைப்பெட்டி, வன விலங்குகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவி வழங்கினார். கோபி ஆர்.டி.ஓ., மீனா ப்ரியதர்ஷினி, மாவட்ட வன அலுவலர் ஜெகநாதன், யூனியன் சேர்மன் அய்யம்மாள், பவானி வட்ட வழங்கல் அலுவலர் ராமராஜ், அந்தியூர் ஆர்.ஐ., உமா மகேஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.