| ADDED : ஜூன் 23, 2024 02:31 AM
ஈரோடு;வாடிக்கையாளர் பெயர்களில், 27 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக நிறுவனத்தின் கிளை மேலாளர் மீது, பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் தரப்பட்டுள்ளது.பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்படும், கிரெடிட் அக்சஸ் கிராம் நிறுவன கோட்ட மேலாளர் பன்னீர் செல்வம், 38; கொடுமுடி, வடக்கு புது மாரியம்மன் கோவில், வடக்கு வீதி எதிர் பகுதியை சேர்ந்தவர். இவர், ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி., மணிவர்மனிடம் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: ஏழை பெண்களுக்கு சிறு கடன்களை வழங்குவது எங்கள் நிறுவனத்தின் நோக்கம். கொடுமுடியில் இயங்கி வந்த மதுரா மைக்ரோ பைனான்ஸ், எங்கள் நிறுவனத்துடன் இணைக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்த கோகுல், 27, கிளை மேலாளராக தொடர்ந்தார். நிறுவனத்தின் சார்பில் கடந்த மார்ச்சில் தணிக்கை நடந்தது. இதில், 46 வாடிக்கையாளர்களிடம் முன்கூட்டி வசூலித்த, 13.௬௦ லட்சம் ரூபாய் கடன் உள்பட, 27.49 லட்சம் ரூபாய் கையாடல் செய்தது தெரிய வந்தது. எனவே கோகுல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் தெரிவித்துள்ளார். கையாடல், மோசடி என இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார், கோகுலை தேடி வருகின்றனர்.