ஈரோடு:''தேர்தல் விதி மீறி பிரசாரத்தில் ஈடுபட்டு வரும், பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை மீது, தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்று, ம.தி.மு.க., பொது செயலர் வைகோ கூறினார்.ஈரோட்டில் மறைந்த கணேசமூர்த்தி எம்.பி., வீட்டுக்கு, ம.தி.மு.க., பொது செயலர் வைகோ, தன் மனைவி ரேணுகா தேவியுடன் நேற்று வந்தார். கணேசமூர்த்தி உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். கணேசமூர்த்தியின் மகன் கபிலன், மகள் தமிழ்பிரியாவுக்கு ஆறுதல் கூறினர்.இதை தொடர்ந்து, நிருபர்களிடம் வைகோ கூறியதாவது: தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள எந்த வாக்குறுதிகளையும், பா.ஜ.,வினர் நிறைவேற்ற மாட்டார்கள். எனவே அவர்களது வாக்குறுதி தமிழகத்தில் எடுபடாது. வெள்ளம், கொரோனா உள்ளிட்ட பாதிப்பு ஏற்படும்போது பிரதமர் மோடி தமிழகத்துக்கு வரவில்லை. ஆனால், தற்போது தேர்தலுக்காக தமிழகத்துக்கு ஒன்பது முறை வந்துள்ளார்.தமிழகத்தில் ஒன்று அல்லது இரண்டு தொகுதிகளிலாவது வெற்றிபெற, மோடி அடிக்கடி வருகிறார். இன்னும் எத்தனை முறை வந்தாலும், தமிழகத்தில் எந்த தொகுதியிலும், பா.ஜ., வெற்றி பெறாது. பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, தொடர்ந்து தேர்தல் விதி மீறி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதற்கு தேர்தல் ஆணையம்தான் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். வைகோவுடன் ம.தி.மு.க. அவைத்தலைவர் அர்ஜூன்ராஜ், மாவட்ட செயலாளர்கள் முருகன், குழந்தைவேல், ஜீவன், ஆலோசனைக்குழு உறுப்பினர் செந்தில்நாதன், முன்னாள் எம்.எல்.ஏ. பூந்துறை பாலு, முன்னாள் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் செந்தில்நாதன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர். -----------