| ADDED : ஆக 18, 2024 02:47 AM
ஈரோடு: ஈரோடு மாவட்டம் பவானி அருகே காளிங்கராயன்பாளையம் அணைக்கட்டில், அத்திக்கடவு - அவிநாசி திட்ட துவக்க விழாவில் பங்கேற்ற, கொ.ம.தே.க., பொது செயலாளர் ஈஸ்வரன், நிருபர்களிடம் கூறியதாவது:இந்த பகுதியில், 50 ஆண்டு காலத்துக்கு மேலான வேண்டுகோளாக இத்திட்டம் இருந்தது. இத்திட்டம் கொண்டு வர போராடி, உயிரிழந்தவர்களுக்கு இத்திட்டம் சமர்ப்பணம். நாங்கள் நேரடியாக, 15 ஆண்டகளாக போராடி வந்தோம். ஆரம்பத்தில் அத்திக்கடவு பகுதியில் திட்டம் துவங்கி, அவிநாசி, பெருந்துறை போன்ற பகுதிகளுக்கு கொண்டு செல்லும்படியாக இருந்தது. அதன்பின், காளிங்கராயன் அணைக்கட்டுக்கு கீழ் இருந்து இத்திட்டத்துக்கு தண்ணீர் எடுத்து செல்லும்படி மாற்றப்பட்டது. இதனால், இத்திட்டத்தை, 'காளிங்கராயன் - அத்திக்கடவு - அவிநாசி திட்டம்' என மாற்றி பெயரிட சட்டசபையில் கோரிக்கை வைத்துள்ளோம். இத்திட்டத்தில் விடுபட்ட, இதுபோன்ற திட்டம் தேவைப்படும் பகுதிகளை இணைத்து, 'திட்டம்-2'க்கான திட்டவரைவை, முதல்வரிடம் வழங்கியுள்ளோம். தற்போதைய திட்டத்தில் கொள்ளளவு, செயல்பாட்டு திறன், இவ்வளவுதான் என்ற ரீதியில், திட்டம்-2 க்கு தனியாக திட்ட வரைவு வகுப்பதாக தெரிவித்துள்ளனர். அவ்வாறு செயல்படும்போது பல பகுதியினர் பயன் பெறுவர். இவ்வாறு அவர் கூறினார்.