| ADDED : ஜூன் 19, 2024 02:32 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி தனியார் நிறுவன ஊழியரிடம் போலீஸ் அதிகாரி போல் பேசி, அவரிடமிருந்து, 19.90 லட்சம் ரூபாய் மோசடி நடந்தது.கிருஷ்ணகிரி அடுத்த சின்னமேலுப்பள்ளியை சேர்ந்தவர் மிதுன், 33, தனியார் நிறுவன ஊழியர்; இவரது மொபைல் போனுக்கு கடந்த மே, 8ல் ஒரு போன் வந்தது. அதில் பேசியவர், தான் மும்பையிலிருந்து உயர் போலீஸ் அதிகாரி என அறிமுகம் செய்து பேசியுள்ளார். அப்போது மிதுனிடம், உங்கள் முகவரிக்கு பல கோடி மதிப்புள்ள போதை பொருட்கள் அடங்கிய பார்சல் கூரியரில் வந்துள்ளது. போதைப்பொருட்கள் கடத்தல் கும்பலோடு உங்களுக்கு என்ன தொடர்பு எனக்கேட்டுள்ளார். பதறிப்போன மிதுன், தனக்கு எதுவும் தெரியாது என விளக்கமளித்தும் அவர் ஏற்காமல், உங்கள் மீது வழக்கு பதிந்தால் பல ஆண்டுகள் சிறையில் இருந்து வெளியே வரமுடியாது எனவும் கூறியுள்ளார். தொடர்ந்து மிதுனிடம் பேசிய அந்த போலீஸ் அதிகாரி, வழக்கு பதியாமல் இருக்க, பணம் வேண்டும் என கூறியுள்ளார். இதைநம்பிய மிதுன் அவர் கூறிய வங்கி கணக்கில், 19.90 லட்சம் ரூபாய் அனுப்பியுள்ளார். அதன்பின் மிதுனை யாரும் தொடர்பு கொள்ளவில்லை. சந்தேகமடைந்த மிதுன், தன்னை தொடர்பு கொண்ட எண்ணுக்கு போன் செய்தபோது அது, 'சுவிட்ச் ஆப்' ஆகியிருந்தது. தன்னிடம் யாரோ போலீஸ் போல் பேசி ஏமாற்றியுள்ளனர் என்பதை மிதுன் உணர்ந்து, நேற்று முன்தினம் அவர் புகார் படி, கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.