ஈரோடு:ஈரோடு தொகுதி தி.மு.க., வேட்பாளர் கே.இ.பிரகாஷ், மொடக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட வேங்கியாம்பாளையம், செங்கோடம்பாளையம், வடக்குப்புதுார், பனங்காட்டுபுதுார், ராமலிங்கம்புதுார், சாணார்பாளையம், கருமாண்டம்பாளையம் உட்பட பல்வேறு பகுதியில் நேற்று திறந்த வேனில் வீதி, வீதியாக கூட்டணி கட்சியினருடன் சேர்ந்து ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.உதயசூரியனுக்கு ஓட்டு கேட்டு அவர் பேசியதாவது: 'இண்டியா' கூட்டணி வெற்றி பெற்றதும் சமையல் காஸ் சிலிண்டர் விலை பாதியாக குறைக்கப்படும். பெட்ரோல் விலை ஒரு லிட்டர், 75 ரூபாயாகவும், டீசல் விலை, 65 ரூபாயாகவும் குறைக்கப்படும். அனைத்து மாணவ, மாணவியரின் கல்விக்கடன்களும் ரத்து செய்யப்படும். விவசாயிகள், நெசவாளர்கள் வாழ்க்கை தரம் உயர, பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும். இண்டியா கூட்டணியின் அனைத்து தேர்தல் வாக்குறுதிகளும் கட்டாயம், முழுமையாக நிறைவேற்றப்படும். கடந்த பட்ஜெட்டில், ஈரோடு பகுதியில் ஜவுளி மினி பூங்கா அமைக்கப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார். அத்திட்டத்தை விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்வேன். இதுபோன்ற திட்டங்களை நிறைவேற்றவும், புதிய திட்டங்களை கொண்டு வரவும் உதய சூரியனுக்கு ஓட்டுப்பதிவு செய்யுங்கள். இவ்வாறு பேசினார்.தெற்கு மாவட்ட தி.மு.க., பொருளாளர் பி.கே.பழனிசாமி, காங்., முன்னாள் எம்.எல்.ஏ., பழனிசாமி, கொடுமுடி ஒன்றிய செயலாளர் சின்னசாமி, மாவட்ட பொறியாளர் பிரிவு அமைப்பாளர் முத்துகுமார், கொடுமுடி டவுன் பஞ்., தலைவர் திலகவதி, கொடுமுடி பயிரிடுவோர் கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் பரிமளா மணி, மாவட்ட பிரதிநிதி உமர், பாசூர் பேரூர் செயலாளர் ராமமூர்த்தி உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.