உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சமுதாயத்தை எழுந்து நிற்க செய்வது சிந்தனையே

சமுதாயத்தை எழுந்து நிற்க செய்வது சிந்தனையே

ஈரோடு: மக்கள் சிந்தனை பேரவை வெள்ளி விழா ஆண்டு நிறைவு நிகழ்ச்சி, ஈரோட்டில் நேற்று நடந்தது. மக்கள் சிந்தனை பேரவை நிறுவனர் மற்றும் தலைவர் ஸ்டாலின் குணசேகரன் தலைமை வகித்தார்.விழாவில் சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன் பேசியதாவது: கிறிஸ்து பிறப்பதற்கு, 2,000 ஆண்டுக்கு முன் வாழ்ந்த, மெசபடேனியாவை சேர்ந்த பரோ என்ற மன்னன் களிமண்ணால் செய்யப்பட்ட படைப்புகள், பாஸ்பிரஸ் உருளையால் செய்யப்பட்ட, மை கொண்டு எழுதப்பட்ட படைப்புகள் என்று, 10,000க்கும் மேற்பட்ட படைப்புகளை சேகரித்து நுாலகத்தை உருவாக்கினான். அதற்கு மன நல மையம் என்று பெயர் வைத்தான். மனிதர்களுக்கும், படைப்புகளுக்கும் தொடர்பு வேண்டும் என்ற சிந்தனையோடு, மனிதர்களை படைப்புகளோடு புழங்கச் செய்தான்.1,000 புத்தகங்களை படித்தவர்கள் தான் எனக்கு நெருக்கமானவர்கள் என ஜூலியட் சீசர் சொன்னதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதைப்போல் நாம் வாழ்கின்ற காலகட்டத்தில் நாம் அறிந்த பல தலைவர்கள், சிந்தனையாளர்கள் என எடுத்துக்கொண்டால், இனத்தின் மீதான தாக்குதலை எதிர்த்து, 25 ஆண்டுக்கும் மேல் சிறையில் வாடிய நெல்சன் மண்டேலாவிடம் காவலர்கள் எந்தவிதமான கருணை காட்ட வேண்டும் என கேட்டபோது, தொடர்ந்து புத்தகங்களை வாசிக்கும் அனுமதியை எனக்கு தாருங்கள் எனக்கேட்டார். வெளிநாடு பயணம் சென்ற அம்பேத்கர், நுாலகத்தின் அருகில் தங்கும் அறை ஒதுக்கி தருமாறு கேட்டார். படிப்பதும், எழுதுவதுமே எனது வேலை என்று மகாத்மா காந்தி கூறினார். ஆக படிப்பும், புத்தகமும் சமுதாயத்துக்கு ஆகச்சிறந்த விஷயங்களாக அறியப்படுகின்றன. இப்படிப்பட்ட ஒரு சிந்தனைதான் ஒரு சமுதாயத்தை எழுந்து நிற்கச்செய்கிறது. உலகில் திருக்குறளுக்கு இணையான படைப்பு இனிமேல் வரப்போவதில்லை என யுனஸ்கோ சொல்கிறது. உலகத்தின் அத்தனை மொழிகளுமே மொழி பெயர்க்கப்பட்டு இனிமேல் வேறு ஒரு மொழியில்லை என்ற நிலையை அடையக்கூடிய படைப்பாக திருக்குறள் மிளிர்ந்துள்ளது. புத்தகங்களை படிப்பது ஆயிரக்கணக்கான சிந்தனையாளர்களின் சிந்தனைகளை மனிதனுக்குள் செலுத்தும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்வில் சக்தி மசாலா நிறுவனங்களின் தலைவர் துரைசாமி, இயக்குனர் சாந்தி துரைசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ