ஈரோடு;ஈரோடு, பெரியார் நகரில் வசிப்பவர் எம்.பி., கணேச மூர்த்தி, 77. ம.தி.மு.க.,வை சேர்ந்த இவர், 1998ல் பழனி, 2009 மற்றும் 2019ல் ஈரோடு லோக்சபா தொகுதியில் வென்று எம்.பி.,யானார். இம்முறையும் ஈரோடு தொகுதியில் போட்டியிட முயன்று வந்த நிலையில், ஈரோடு தொகுதி தி.மு.க.,வுக்கு ஒதுக்கப்பட்டது.இந்நிலையில், ஈரோடு பெரியார் நகரில் உள்ள தன் வீட்டில் நேற்று காலை, 9:30 மணிக்கு எம்.பி., கணேசமூர்த்தி, தான் சில மாத்திரைகள் சாப்பிட்டு, உடல் நலம் குன்றி உள்ளதாக, மகன் கபிலனிடம் தெரிவித்தார். இதையடுத்து, உடனடியாக அவர் ஈரோடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின், கோவை கே.எம்.சி.எச்., மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.'கணேசமூர்த்தி 4 முதல் 5 பூச்சிக்கொல்லி மாத்திரைகள் சாப்பிட்டுள்ளார். இவை அதிக விஷத்தன்மை கொண்ட மாத்திரைகள்' என, டாக்டர்கள் மற்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.எம்.பி., தற்கொலைக்கு முயன்ற தகவல் பரவியதால், வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, உடனடியாக மருத்துவ மனைக்கு சென்று விசாரித்தார். தி.மு.க., உள்ளிட்ட கட்சியினர் கூறியதாவது:ஈரோடு தொகுதியை தனக்கு அல்லது வேறு தொகுதியாக இருந்தால் கட்சிக்காக உழைத்து, சிறை சென்றவர்களுக்கு வாய்ப்பு தர வைகோவிடம், கணேசமூர்த்தி வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால், திருச்சி தொகுதி வேட்பாளராக வைகோவின் மகன் அறிவிக்கப்பட்டார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான கணேசமூர்த்தி, தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கணேசமூர்த்திக்கு, அவசர சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு, 'எக்மோ' கருவி பொருத்தப்பட்டுள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.கணேசமூர்த்தியை பார்க்க, கட்சியின் பொது செயலர் வைகோ, முதன்மை செயலர் துரை வைகோ வந்தனர். டாக்டர்களிடம் அவரது உடல் நலம் குறித்து விசாரித்தார்.இவ்வாறு அவர்கள் கூறினர்.