| ADDED : மே 17, 2024 02:15 AM
சத்தியமங்கலம்: கடம்பூர் மலையில் உள்ள மலை கிராமம் மாக்கம்பாளையம். குரும்பூர் பள்ளம், சக்கரை பள்ளம் என்ற இரண்டு காட்டாறுகளை கடந்தால் மட்டுமே இங்கு செல்ல முடியும். மலை காலங்களில் இவற்றில் வெ ள்ளப்பெருக்கு ஏற்படும் போது, கிராமத்துக்கு பஸ் போக்குவரத்து துண்டிக்கப்படும். இதனால் இப்பகுதிகளில் வாழும் மக்கள், பிற பகுதிகளுக்கு செல்ல முடியாமல் முடங்கும் நிலை தொடர்கிறது. இவற்றின் குறுக்கே உயர் மட்ட பாலம் கட்ட, பல ஆண்டுகளாக பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்தனர். இதை தொடர்ந்து ஒன்றரை ஆண்டுகளுக்கும் முன் இரு காட்டாறுகளின் குறுக்கே உயர் மட்ட பாலம் கட்டும் பணி தொடங்கியது. விரைவாக பணி முடிந்து பயன்பாட்டுக்கு வரும் என்று, மலை கிராம மக்கள் எதிர்பார்த்துள்ளனர். ஆனால், மிக மிக மந்தமாக பணி நடக்கிறது. மாக்கம்பாளையம், அரிகியம் வனப்பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை முதல் இரவு வரை கனமழை கொட்டியது. இதனால் குரும்பூர் பள்ளம், சக்கரை பள்ளம் காட்டாறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. நேற்று காலை இந்த வழியாக மாக்கம்பாளையம் சென்ற அரசு பஸ், முதல் பள்ளத்தை கடந்து சென்றது. சக்கரை பள்ளம் காட்டாற்றில் வெள்ளம் அதிகம் சென்றதால், பஸ் சென்றால் சேற்றில் சிக்கும் அபாயம் இருந்தது. இதை உணர்ந்த டிரைவர், பயணிகளை அதே இடத்தில் இறங்கச் சொல்லி விட்டார். வேறு வழியில்லாத நிலையில் கொடிய விலங்குகள் நடமாடும் பகுதியில், 12 கி.மீ., நடந்தே செல்ல வேண்டிய கட்டாயத்துக்கு பயணிகள் தள்ளப்பட்டனர்.