| ADDED : ஆக 06, 2024 01:42 AM
ஈரோடு, ஈரோடு மாநகராட்சி பகுதியில், ஊராட்சிக்கோட்டை கூட்டு குடிநீர் திட்டத்தில், தண்ணீர் அழுத்தம் போதிய அளவில் இல்லாததால், ஒரு சில பகுதிகளில், குடிநீர் வினியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து புகார் தெரிவித்தும், மாநகராட்சி அதிகாரிகள் அலட்சியத்துடன் செயல்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. அதேசமயம் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில், மக்களின் கேள்விகளுக்கு கவுன்சிலர்கள் பதில் சொல்ல முடியாமல் திணறி வருகின்றனர்.இதுகுறித்து மாநகராட்சி அலுவலர் ஒருவர் கூறியதாவது: தற்போது மாநகராட்சிக்கு உட்பட்ட சில பகுதிகளில், நீரேற்றம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக எல்லை வார்டுகளில் இந்த பிரச்னை உள்ளது.தண்ணீர் அழுத்தம் போதிய அளவில் இல்லை. இதற்கான கருவி மற்றும் தேவையான உபகரணங்கள் பொருத்தப்படுவது குறித்து ஆலோசனை நடந்தது. இதற்காக, 13 கோடி ரூபாய் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டுள்ளது. விரைவில் குடிநீர் வினியோகம் தொடர்பான பிரச்னை தீர்வுக்கு வரும். ஊராட்சிக்கோட்டை கூட்டுக் குடிநீர் திட்டம் தொடர்பான பிரச்னையை, மாநகராட்சி நிர்வாகம் நேரடியாக கவனித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.