| ADDED : மார் 25, 2024 01:18 AM
திருப்பூர்:திருப்பூர்
மாவட்டத்தில் எட்டு சட்டசபை தொகுதிகள் உள்ளன. லோக்சபா தேர்தல் நாளான
ஏப்ரல் 19ம் தேதி, மாவட்டத்திலுள்ள 2,540 ஓட்டுச்சாவடிகளில்,
ஓட்டுச்சாவடி அலுவலர்கள் 12,579 பேர் பணிபுரிய உள்ளனர்.ஓட்டுச்சாவடி
தலைமை அலுவலர், ஓட்டுப்பதிவு அலுவலர் -1, 2, 3 முதலான
ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு, நான்கு கட்ட பயிற்சி வகுப்பு
அளிக்கப்படுகிறது. முதல்கட்ட பயிற்சி வகுப்பு, அந்தந்த சட்டசபை
தொகுதிக்கு உட்பட்ட பள்ளி, கல்லுாரிகளில் நேற்று நடைபெற்றது.திருப்பூர்
வடக்கு சட்டசபை தொகுதிக்கு, அங்கேரிபாளையம் கொங்கு வேளாளர்
மெட்ரிக் பள்ளியிலும்; திருப்பூர் தெற்கு சட்டசபை தொகுதிக்கு,
ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் பயிற்சி
வகுப் புகள் நடைபெற்றன. மாதிரி ஓட்டுச்சாவடி மையம் அமைக்கப்பட்டு,
தேர்தல் நாளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து செயல்விளக்கம்
அளிக்கப்பட்டது. தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு அலுவலர்கள், தபால்
ஓட்டளிக்க தேர்தல் கமிஷன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்றைய
பயிற்சி முகாமின் ஒருபகுதியாக, தபால் ஓட்டுகோரும் படிவம் 12 டி
வழங்கப்பட்டது. பயிற்சியில் பங்கேற்ற அரசு அலுவலர்கள், தபால்
ஓட்டுக்கான படிவத்தை பூர்த்தி செய்து வழங்கினர்.