ஈரோடு: ஈரோட்டில், ஈமச்சடங்கு நடந்த வீட்டில், குடிபோதை ஆசாமி நடத்திய வெறிச்செயலில், 10 பேர் காயமடைந்தது, பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.ஈரோடு, பி.பி.அக்ரஹாரம் பூம்புகார் நகரை சேர்ந்த ஒருவர், இரு வாரங்களுக்கு முன்பு இறந்து விட்டார். அவரது ஈம சடங்கு காரியங்கள் நேற்று நடந்தன. இதனால் அவரது வீட்டுக்கு உறவினர்கள் வந்திருந்தனர்.இந்நிலையில் நேற்று மாலை அந்த பகுதியை சேர்ந்த ஒரு வாலிபர், குடிபோதையில் வந்து அங்கிருந்தவர்களிடம் தகராறில் ஈடுபட்டார்.அப்போது அங்கிருந்தவர்களை சரமாரியாக தாக்க தொடங்கினார். கற்கள், கட்டை, நாற்காலி போன்றவற்றை கொண்டு தாக்கினார். தடுக்க வந்தவர்களை மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தினார். இதில் அதே பகுதியை சேர்ந்த அப்துல் ரகுமான், 24, என்பவருக்கு வெட்டு காயம் விழுந்தது.திருப்பூர் மாவட்டம் அவினாசியை சேர்ந்த விஸ்வநாதன், 36; இவர் மனைவி லட்சுமி, 32; சித்ரா, 46; இவருடைய மகன் சக்திவேல், 26; சஞ்சய், ஆனந்த், சதீஷ்குமார், இஸ்மாயில் என, 10 பேர், வாலிபர் தாக்கியதில் காயமடைந்தனர்.அனைவரும் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கருங்கல்பாளையம் போலீசார் நடத்திய விசாரணையில், குடிபோதையில் தாக்குதலில் ஈடுபட்ட வாலிபர், அதே பகுதியை சேர்ந்த அரிசி வியாபாரி காஜா மைதீன், 28, என தெரிந்தது.எந்த காரணத்துக்காக அவர் தாக்குதலில் ஈடுபட்டார் எனத் தெரியவில்லை. முன் விரோதமா அல்லது வேறு பிரச்னை உள்ளதா என்பது தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.ஈமச்சடங்கு நடந்த வீட்டில், குடிபோதை வாலிபரின் வெறிச்செயலில், ௧௦க்கும் மேற்பட்டோர் காயமடைந்தது, அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.