| ADDED : டிச 02, 2025 02:59 AM
ஈரோடு, ரேபீஸ் நோய் வைரஸ், மனித நரம்பு மண்டலம் பாதிக்கும் உயிர் கொல்லி நோயாகும். இந்த வைரஸ் பாதிக்கப்பட்ட மிருகங்கள் கடிப்பதால், எச்சில் வழியாக மனிதர், பிற மிருகங்களுக்கும் பரவும். இந்தியாவில் நாய்கள் மூலமே மனிதர்களுக்கு பரவுகிறது. பூனை, குரங்கு, வன விலங்குகள் மூலமும் பரவ வாய்ப்புள்ளது. ரேபீஸ் தாக்கிய நாய் திடீரென ஆக்ரோஷமாக மாறலாம். வழக்கத்துக்கு மாறாக நாய் அமைதியற்று, பதட்டமாக இருக்கும். வாயில் அதிக எச்சில் வடியும். தண்ணீர் குடிக்கும்போது விழுங்கும் தசைகளில் தசைப்பிடிப்பு ஏற்படும். இது ஹைட்ரோபோபியா எனப்படும். ஒருவரை செல்லப்பிராணி, வன விலங்கு கடித்தால், நகத்தால் கீறினால், அதன் எச்சில் நம்மீது பட்டால் உடன் கடிபட்ட இடத்தை, 15 நிமிடம் குழாய் நீர், சோப்பு நுரை மூலம் கழுவ வேண்டும். அழுத்தி தேய்க்க கூடாது. கட்டு கட்டக்கூடாது. எருக்கம்பால் விடுவது, மந்திரிப்பது கூடாது. அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி செலுத்த வேண்டும். தவறினால் ரேபீஸ் நோய் தாக்கி மரணம் நிகழ வாய்ப்புண்டு. கடித்த அன்று முதல் தடுப்பூசி, 3வது நாள், ஏழாம் நாள், 28ம் நாள் என, நான்கு தடுப்பூசி கட்டாயம் போடவேண்டும். செல்லப்பிராணி, குரங்கு, வன விலங்குகள் கடித்தால் காலம் தாழ்த்தக்கூடாது. வீட்டில் வளர்க்கும் நாய், பூனை போன்ற செல்ல பிராணிகளுக்கு ஆண்டுக்கு ஒரு முறை அரசு கால்நடை மருத்துவமனை மூலம் இலவச ரேபீஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும். இதை ஈரோடு கலெக்டர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.