உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வேலை வாங்கித் தருவதாக மோசடி தி.மு.க., பிரமுகர் மீது கலெக்டரிடம் புகார்

வேலை வாங்கித் தருவதாக மோசடி தி.மு.க., பிரமுகர் மீது கலெக்டரிடம் புகார்

ஈரோடு: மத்திய அமைச்சர் அழகிரியின் நண்பர் எனக்கூறி, வேலை வாங்கித்தருவதாக பண மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டரிடம் பலர் மனுக்கொடுத்தனர். நாமக்கல் மாவட்டம் கபிலமலை அடுத்த கபிலகுறிச்சியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவருடன் 30க்கும் மேற்பட்டோர், ஈரோடு மாவட்ட கலெக்டர் காமராஜிடம் அளித்த மனு: ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 135 பேருக்கு, சாலைப்பணியாளர்களாக நியமனம் செய்ய நிர்வாக தீர்ப்பாயம் உத்தரவிட்டது. அதை அமலாக்குவதில் தாமதம் ஏற்பட்டது. இது தொடர்பாக, தி.மு.க., கிளைச் செயலாளர்கள் முத்தம்பாளையம் பழனிசாமி, கொங்கம்பாளையம் அருணாசலம் மூலம், அழகிரி பகுத்தறிவு பேரவை நிர்வாகி தமிழ்செல்வனிடம் பேசினோம். மத்திய அமைச்சர் அழகிரியை தனக்கு தெரியும் என்றும், அவர் மூலம் பணியை பெற்றுத்தருவதாக, தமிழ்செல்வன் கூறினார். ஒவ்வொருவரிடமும் தலா 40 ஆயிரம் ரூபாய் கேட்டார். முதற்கட்டமாக தலா 12 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை கொடுத்தோம். இரண்டு ஆண்டுக்கு மேலாகியும் எங்களுக்கு வேலை வாங்கித்தரவில்லை. பணத்தையும் திரும்பத் தரவில்லை. தமிழ்செல்வனிடம் கேட்டால், கிரி என்பவர் மூலம் பணிக்கு முயன்றதாகவும், அவரைப் பார்க்கும்படி கூறுகின்றனர். அவர் யார் எனத்தெரியவில்லை. இதற்கிடையில், தமிழ்செல்வன் 1.35 லட்சம் ரூபாய் முதற்கட்டமாக வழங்குவதாக கூறி, ஒரு செக் கொடுத்தார். அந்த செக் வங்கியில் செலுத்தியபோது, பணமின்றி திரும்பியது. எனவே, நாங்கள் இழந்த தொகையை எங்களுக்கு பெற்றுத்தர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை