கோபி, கோபியில் அ.தி.மு.க., கூட்டத்துக்கு வந்து பலியான உறுப்பினர் உடலுக்கு, இ.பி.எஸ்., அஞ்சலி செலுத்தி, அவரின் தாயிடம், 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார்.ஈரோடு மாவட்டம் கோபியில் நேற்று முன்தினம் இரவு நடந்த, 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' பிரசார பொதுக்கூட்டத்தில், அ.தி.மு.க., பொது செயலர் இ.பி.எஸ்., பேசினார்.கோபி, கொண்டையம்பாளையத்தை சேர்ந்த கட்டட தொழிலாளி அர்ஜூனன், 45; அ.தி.மு.க., கட்சி உறுப்பினர். இவரின் முதல் மனைவி, 15 ஆண்டுகளுக்கு முன் பிரிந்து சென்றார். இரண்டாவதாக திருமணம் செய்த பெண்ணும் பிரிந்து சென்று விட்டார். அர்ஜூனனுக்கு குழந்தைகள் இல்லை. அ.தி.மு.க., பொதுக்கூட்டத்துக்கு, முத்து மகால் அருகே மெயின் ரோட்டில் நடந்து சென்ற அர்ஜூனன் திடீரென மயங்கி விழுந்தார். கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இதுகுறித்து அவரின் தாய் மாகாளி, 65, புகாரின்படி, கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கோபி அரசு மருத்துவமனையில், பிரேத பரிசோதனை முடிந்த அர்ஜூனனின் உடலுக்கு, அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்., நேற்று காலை அஞ்சலி செலுத்தினார்.மாகாளிக்கு ஆறுதல் தெரிவித்து, ''உங்களுக்கு நாங்கள் தேவையான உதவி செய்கிறோம். தற்போது பத்து லட்சம் ரூபாய் மாவட்ட கழகம் மூலம்அளிக்கிறோம். இன்னும் பத்து லட்சம் ரூபாய் கட்சி தலைமை கழகம் மூலம் வழங்குவோம்,'' எனக்கூறி, 10 லட்சம் ரூபாய்க்கான டி.டி.,யை வழங்கினார்.பின் நிருபர்களிடம் இ.பி.எஸ்., கூறுகையில், ''இது ஒரு துயர சம்பவம். அவரது தாய்க்கு எனது ஆழ்ந்த இரங்கல்,'' என்றார். நிருபர்கள் தரப்பில் 'த.வெ.க., கூட்டணி என கேள்வி எழுப்பியதற்கு, 'இன்றைக்கு வேண்டாம்' எனக்கூறி சென்று விட்டார். அவருடன் எம்.எல்.ஏ.,க்கள் கருப்பணன், பண்ணாரி மற்றும் கட்சியினர் உடனிருந்தனர்.